பக்கம்:புது டயரி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நோய்க்கு இடம் கொடு

39

 கணைகளால் துளைத்திருப்பார்கள். அவருக்கும் கோபம் வந்திருக்கக்கூடும்.

இவ்வளவு கவலை, குழப்பம், கவனம், சிரத்தை, சுறுசுறுப்பு, கட்டுக் காவல், உபசாரம், அன்பு-எல்லாம் இப்போது ஏன் வந்தன? முன்பெல்லாம் இந்த அன்பு எங்கே? திருவாளர் நோயார் என்னிடம் வந்து சேர்ந்ததனால் வந்த பெருமை அல்லவா இது அதனால்தான், ‘நோய்க்கு இடம் கொடு’ என்று ஆத்திசூடியைத் திருத்தி விடலாமா என்று எனக்குத் தோன்றுகிறது.

வைணவர்கள், பெரியவர்களுக்கு நோய்வந்தால், ‘நோய் வாய்ப்பட்டிருக்கிறார்கள்’ என்று சொல்வதில்லை; ‘நோவு சாத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்பார்கள். அதாவது நோய் அவரைத் துன்புறுத்தவில்லையாம். ஆடையைக் கட்டிக் கொள்வது போலே, மாலையைச் சாத்திக் கொள்வது போலே, அவர்களே திருவுள்ளம் கொண்டு நோயைத் - தம்மிடம் இருக்கும்படி பணித்திருக்கிறார்களாம். எனக்கு உண்மையிலே ‘நோவு சாத்திக் கொள்ளும் திறமை இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்னுடன் வாழ்கிறவர்கள், என் நண்பர்கள் முதலியவர்களின் அன்பைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், உடனே அந்த நோயை எடுத்து மேலே சாத்திக் கொள்ளலாம் அல்லவா?

இரண்டே நாள் நான் மருத்துவமனையில் இருந்தேன். உண்மையைச் சொல்கிறேன். அந்த இரண்டு நாள் இரண்டு யுகங்களாக இருந்தன. என் நண்பர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் படுத்திருந்தபோது போய்ப் பார்த்து வந்திருக்கிறேன்; என்னலான பணியையும் செய்திருக்கிறேன். என் குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்த போதெல்லாம் கவலையுடன் இருந்து கவனித்திருக்கிறேன். அப்போது சில சமயங்களில் ஒரு பைத்தியக்கார எண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/46&oldid=1149561" இலிருந்து மீள்விக்கப்பட்டது