பக்கம்:புது டயரி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

புது டயரி


இலக்கணமாகிய பாங்கு இந்தக் காலத்துப் பட்டிமண்டபத்துக்கு மிகமிக அவசியம். பாங்கு என்பது பக்குவம்; இங்கிதம்; பிறர் உள்ளம் புண்படாமல் நயமாகப் பேசுவது. இப்போது பல பட்டி மண்டபங்களில் இந்தப் பாங்கு அமைவதில்லை. கோழிகள் கழுத்தைச் சிலிர்த்துக்கொண்டு போரிடுமே, அப்படிக் காட்சியளிக்கின்ற இடமும் உண்டு. ஒருவரை ஒருவர் இழித்தும், பகடி செய்தும், பேசும் பொருளுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாமல் செய்கிறவர்கள் பலர். ஒன்று அது திட்டு மண்டபம் ஆகும்; அல்லது வெட்டி மண்டபம் ஆகிவிடும். சிலர், “அன்பருடைய மனைவி அவருக்கு இந்த அறிவுரையைச் சொல்லியிருப்பார்கள். அப்படிக் கேட்டு வருவது அவர் வழக்கம்” என்று வீட்டில் உள்ளவர்களையெல்லாம் இழுத்து வருவார்கள். அதைக் கேட்டுச் சபையிலுள்ளவர்கள் ஆரவாரிப்பார்கள்; கை தட்டுவார்கள். “என் நண்பர் இராமாயணத்தைப் படிக்காமலே வந்து பேசுகிறாரே! இவரிடம் படிக்கும் மாணாக்கர்களை நினைந்து இரங்குகிறேன்” என்று பேசுவார். முன் அமர்ந்திருக்கும் கூட்டத்தில் சிரிப்பும் கைதட்டலும் எழும். அப்போது எதிர்க்கட்சிக்காரர் சும்மா இருப்பாரா? “அவரவர்கள் தம்முடைய சொந்த அனுபவத்தைக் கொண்டே பிறரை அளப்பார்கள். எதிர்க் கட்சி நண்பர் தம்முடைய பழக்கத்தையே மற்றவர்களும் கொண்டிருப்பதாக எண்ணுகிறார். பாவம்! அவருடைய பரிதாப நிலைக்கு இரங்குகிறேன்” என்பார். மறுபடியும் கைதட்டல் ஆரவாரம்.

இலக்கியச் சுவையை வளர்ப்பதற்காகப் பட்டிமண்டபம் நடக்க வேண்டும். இப்படியெல்லாம் பேசினால் இலக்கியச் சுவையா தோன்றும்? திரு.வி.க. அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்; “முன்பெல்லாம் இயல்தமிழ், இசைக் தமிழ், நாடகத்தமிழ் என்று மூன்று தமிழ்கள் இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/63&oldid=1149595" இலிருந்து மீள்விக்கப்பட்டது