பக்கம்:புது டயரி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

புது டயரி

 இளையான்குடி மாற நாயனார் விதைத்த நெல்லைச் சிவனடியாருக்காக அரித்து வந்து சமைக்கச் செய்து உணவு வழங்கியவர்; மெய்ப்பொருள் நாயனார் சிவவேடம் பூண்டு வந்த பகையரசனை வணங்கி அவனால் கொல்லப்பட்டவர்; இயற்பகையார் சிவனடியாருக்குத் தம் மனைவியைக் கொடுத்தவர். பெரியபுராணத்தைக் கண்டிக்கும் கொள்கையுடையோர் இயற்பகை நாயனரை மிகக் கேவலமாகப் பேசுவார்கள். நன்னெறிக் கழகத்தினர் கடவுள் உணர்ச்சியும் அடியார் பக்தியும் உடையவர்கள். ஆனாலும் பேசுபவர்கள் இயற்பகை நாயனரைச் சாடும்போது மிகவும் இழிவாகப் பேசிவிடலாம். இதை எண்ணி, அழைப்பிதழைப் பார்த்த சிலர், “இப்படி ஒரு பட்டிமண்டபம் அமைக்கலாமா? இதற்குக் கி.வா.ஜ. தலைமை தாங்கலாமா?” என்று குறை கூறினார்கள்.

நானோ தலைமை தாங்க ஒப்புக்கொண்டு விட்டேன், நடுவராக அமர்ந்துவிட்டேன்.

என்னுடைய முன்னுரையில், வாதத்துக்கு வரம்பு எண்ணினேன். இது என் வழக்கம். “இன்று இங்கே நடைபெறுவது சேக்கிழார் விழா. சேக்கிழார் தெய்வம் போன்றவர். அவருடைய தெய்வங்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள்; தெய்வத்தினும் மேலானவர்கள்; அதனால் தான் அவர்கள் வரலாற்றைச் சொல்லும் புராணம் பெரியபுராணம் ஆயிற்று. அடியார்கள் புராணம் பெரியபுராணம் என்றால் ஆண்டவன் புராணம், சிறிய புராணம் என்று தானே கொள்ள வேண்டும்? இப்போது இங்கே சேக்கிழார் காட்டும் மூன்று தெய்வங்களைப் பற்றிய வாதம் நிகழப் போகிறது. தெய்வங்கள் என்ற உணர்வோடு பேசுவதுதான் இந்த மேடைக்கு ஏற்ற பாங்கு. தீர்ப்பில், யாரேனும் ஒருவரைத்தான் தெரிந்தெடுக்க வேண்டிவரும்; மற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/65&oldid=1149598" இலிருந்து மீள்விக்கப்பட்டது