பக்கம்:புது டயரி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டிமண்டபம்

59

 இருவர்களை ஒதுக்கவேண்டியிருக்கும். அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் தாழ்ந்தவர்கள் என்று எண்ணக்கூடாது. நம்மால் பின்பற்றுவதற்கு எளியவர் யார் என்பதுதான் வாதப் பொருள். நாம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறோம். நம்மால் பின்பற்றுவதற்கு உரியவர் நமக்கு எளியவராக, இந்த மூவரிலும் நம்மால் தொடுவதற்குரிய சமீபத்தில் இருப்பவராக இருப்பவர். மற்றவர்கள் மேல் நிலையில், நம்மால் அணுகுவதற்கரிய மேல்நிலையில் இருப்பவர்கள் ஆவார்கள். இவற்றையெல்லாம் மனத்திற் கொண்டு பாங்காகப் பேச வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்” என்றேன். வாதம் மிகவும் பாங்காக, பெரிய புராணத்தில் உள்ள நுட்பங்களை விளக்குவதாக அமைந்தது.

மற்றொரு சமயம் குருவிக்கரம்பை என்ற இடத்தில் ஒரு பட்டி மண்டபத்துக்குத் தலைமை தாங்க நேர்ந்தது. “வள்ளுவர் வகுத்த நெறியில் சென்றவர் கண்ணகியா, சீதையா?” என்பது வாதப்பொருள். சீதையை இழித்திப் பேச இந்தத் தலைப்புச் சிலருக்கு இடம் கொடுக்கலாம், அத்தகைய நோக்கத்தோடே இது போன்ற தலைப்பைக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் என்று முன்பே சொன்னேன்.

ஆகவே என் முன்னுரையில் வரம்பு கோலினேன். “இன்று இரண்டு கற்புடைத் தெய்வங்களைப் பற்றிய ரசமான வாதம் நிகழப் போகிறது. கண்ணகி தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தெய்வமாக வழிபடப் பெறும் கற்பரசி. சீதை பாரத நாடு முழுவதும் கற்பின் கனலியாக வழிபடும் தெய்வம். இங்கே வள்ளுவர் வகுத்த நெறியின் படி வாழ்ந்தவர் யார் என்பது பற்றியே பேச வேண்டும். அதன்படி வாழாதவர் கற்பரசி அல்லர் என்று சொல்லக் கூடாது. கற்பைப் பற்றிய வாதம் அன்று இது” என்று சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/66&oldid=1149601" இலிருந்து மீள்விக்கப்பட்டது