பக்கம்:புது டயரி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

புது டயரி

 பேச்சாளர்கள் வாதம் புரிந்தார்கள். கண்ணகி பக்கத்தில் வாதிட்ட இளைஞர் ஒருவர், “அயலான் இடத்தில் பல மாதங்கள் இருந்தவளைக் கற்புடையவள் என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்றார், நான் உடனே எழுந்து “இப்படிப் பேசக்கூடாது என்று முன்பே நான் சொன்னேன்” என்றேன். அந்த இளைஞர், “நடுவரவர்களுக்குச் சீதையின்மேற் காதல் போலும்” என்றார். “ஆம்! எனக்குச் சீதையின் மேலும் தாய்க்காதல்; கண்ணகியின் மேலும் தாய்க்காதல்” என்றேன். இளைஞர் வாதிட்டு அமர்ந்தார். இராமாயணத்தை நன்றாகப் படித்தவர்களும் அங்கே வாதிட்டார்கள்.

நான் தீர்ப்பளிக்கத் தொடங்கினேன். அந்த இளைஞரும் அவரைச் சார்ந்தவர்களும் நான் சீதையின் சார்பில் தீர்ப்பளிப்பேன் என்று எண்ணியிருக்கலாம். நான் கண்ணகியின் சார்பில்தான் தீர்ப்பளித்தேன். தீர்ப்பளித்த முறையைச் சொல்கிறேன்.

“திருவள்ளுவர் ‘தெய்வம் தொழாஅன் கொழுநற் ருெழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை’ என்று ஒரு நெறி வகுக்கிறார். கண்ணகியிடம் காமவேள் கோட்டம் கைதொழுதால் நலம் என்று சொல்ல அவள், ‘பீடு அன்று’ என்று சொல்லித் தொழவில்லை. சீதையோ இராவணனால் எடுத்துச் செல்லப்பட்டபோது வனத்துறையும் தெய்வங்களுக்கு முறையிட்டாள். அதனால் வள்ளுவர் வகுத்த நெறியில் சென்றவள் கண்ணகி. தண்டவாளத்தில் செல்லும் ரெயில் போன்றவள் அவள். சீதை கார் போன்றவள்” என்று சொல்லி நிறுத்தினேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறந்த வாகனங்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/67&oldid=1149602" இலிருந்து மீள்விக்கப்பட்டது