பக்கம்:புது டயரி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாவது

78

 என்றும் பெயர் பெறும். கலியுகத்தில் விஞ்ஞானிகள் பதார்த்தங்களைத் திடபதார்த்தம், திரவ பதார்த்தம், வாயுபதார்த்தம் என்று பிரிப்பார்கள். திடபதார்த்தமாகப் பொடி செய்து மூக்கில் உறிஞ்சி அநுபவிக்கவும், திரவ பதார்த்தமாக வாயிலிட்டு ரசத்தை அநுபவிக்கவும், சுருட்டாக்கி வாயுபதார்த்தமாகப் புகையை இழுத்து அநுபவிக்கவும் இந்தப் பத்திரம் உபயோகப்படும்” என்று அதன் மகிமையை உரைத்தான்.

பிரம்மபத்திரம் என்று புகையிலையை ஏன் சொல்ல வேண்டும் என்று ஆராயப் புகுந்து, இப்படிக் கோணலான கற்பனை ஒன்று என் மூளையில் உதயமாயிற்று என்பதற்காக இதை எழுதினேன்.

தமிழ் நாட்டில் வைதிகர்கள் புகையிலை போடுகிறார்கள்; பொடி போடுகிறார்கள்; ஆனால் சுருட்டுக் குடிப்பதில்லை. சுருட்டுக் குடிப்பதை ஆசார விரோதமாகக் கருதுகிறார்கள். புகையிலையே கூடாதென்றால் வேறு இரண்டு வகையில் மட்டும் அதை உபயோகிக்கலாமா? யோசித்த பிறகு உண்மை தெரிந்தது. அந்தக் காலத்தில் எச்சில் கூடாது என்று கவனமாக இருப்பார்கள் வைதிகர்கள். எதையும் தூக்கிக் குடிப்பார்கள். பொடியாகப் போடும்போதோ, புகையிலையாகப் போடும் போதோ எச்சில் தோஷம் உண்டாவதில்லை. சுருட்டுப் பிடிக்கும் போது அதை எச்சிலாக்கிக் கையில் எடுக்கிறோம்; மறுபடியும் பிடிக்கிறோம். ஆகையால்தான் அதைமட்டும் ஆசார விரோதம் என்று தள்ளிவிட்டார்கள்.

“புகையிலை விரித்தால் போச்சு, பொம்பளை சிரித்தால் போச்சு” என்று ஒரு பழமொழி வழங்குகிறது. புகையிலையை மூடிவைத்துக் கொள்ளவேண்டும். அதை விரித்தால் அதன் காரம் போய்விடுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/80&oldid=1150834" இலிருந்து மீள்விக்கப்பட்டது