பக்கம்:புது டயரி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுதுகோலின் அவதாரம்

89


தாளர்கள் என்று பெயர். எழுத்தாளன் சேந்தன் என்று ஒரு புலவரே இருந்திருக்கிறார், கூலிக்கு எழுதிக் கொடுக்கிறவர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு புலவரிடமும் யாரேனும் ஒருவராவது இருந்து அவர் சொல்வனவற்றை எழுதி வருவார். அவருக்குக் கற்றுச் சொல்லி என்று பெயர். ஒலையில் கூலிக்கு எழுதுகிறவர்கள் பெரிய புலவர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஏதோ ஒரளவு தமிழில் பயிற்சியிருந்தால் போதும். நிரம்பிய புலமை இல்லாதனாதல் அவர்கள் தவறு செய்வதும் உண்டு. “எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்” என்று ஒரு பழமொழி வழங்குகிறது. “தவலை போயிற்று” என்று எழுத வேண்டியதை, “தலை போயிற்று” என்று எழுதுகிறவர்களும் இருந்தார்கள்.

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. “மூண்ணும் முறை பகர்த்தும் போழ் ஸமுத்ரம் மூத்ர மாகுன்னு” என்பது அது. ஏட்டில் ஸமுத்திரம் என்று இருந்தது.பிரதி பண்ணினவன் ஸ வை விட்டு விட்டு முத்ரம் என்று எழுதி விட்டான். அதைப் பார்த்து மற்றொருவன் எழுதினான்; முத்ரமாக இருக்காது, மூத்ரமாகத்தான் இருக்க வேண்டு மென்று அவன் மூத்ரம் என்று எழுதிவிட்டான், ஸமுத்ரம் முத்ரமாகிப் பிறகு மூத்ரமாகி விட்டது. முன்றாவது முறை பிரதி செய்யும்போது ஸமுத்ரம் மூத்ரமாகும் என்பது மலையாளப் பழமொழியின் பொருள்.

தமிழ்ச் சங்கத்தில் நன்றாகப் படித்தவர்களே எழுத்தாளர்களாக இருந்தார்கள். அவர்கள் ஓர் அறையில் உட்கார்ந்திருப்பார்கள். அறைக்கு வெளியே புலவர்கள் அமர்ந்திருப்பார்கள். யாராவது புதிய புலவர் ஒருவர் அங்கே வந்து தாம் இயற்றியிருக்கும் கவிதையைப் பாடிக் காட்டுவார். அவர் பாடப் பாட உள்ளே உள்ளவர்கள் அதை எழுதிக் கொள்வார்கள். புலவர் பாடி முடித்தவுடன் சங்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/96&oldid=1151464" இலிருந்து மீள்விக்கப்பட்டது