பக்கம்:புது டயரி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

புது டயரி

 புலவர்கள், “இந்த நூல் பழைய நூல்போல இருக்கிறதே!” என்று சொல்வார்களாம். வந்த புலவர், “இல்லையே! நான் புதிதாகப் பாடியது அல்லவா?” என்பார். “இந்த நூலின் பிரதி எங்கள் நூல் நிலையத்தில் இருக்கிறதே” என்று சங்கப் புலவர்கள் சொல்லுவார்களாம். உள்ளே இருந்தவர்கள், சொல்லச்சொல்ல எழுதிய நூலைக் கொண்டு வந்து காட்டுவார்களாம். வந்த புலவர் வயிறு எரிந்து போவாராம். இப்படிப் பல காலம் கடந்து வந்ததாம்.

இப்படி அக்கிரமம் நடந்து வருவதை இடைக்காடர் என்னும் புலவர் கேள்வியுற்றார் எப்படியாவது இந்த அநியாயத்தை வெளிப்படுத்தி மறுபடி நடக்காமல் செய்து விடவேண்டுமென்று அவர் தீர்மானித்தார்.

அவர் சங்கத்துக்குப்போய்த் தாம் ஒரு நூல் பாடியிருப்பதாகச் சொன்னர். “வெண்பாவால் ஆனது அந்த நூல்” என்றும் சொன்னார். சங்கப் புலவர்கள் அதைச்சொல்லும் படி சொன்னார்கள். இடைக்காடர் சொல்லப் போவதை எழுதிக் கொள்ள உள்ளே சிலர் தயாராக இருந்தார்கள். இடைக்காடர் பாடத் தொடங்கினார். பாட்டின் நடுவில் காக்கை முதலியவற்றின் ஒலியைக்கவிதையோடு இணைத்துப் பாடினார். அந்த ஒலிகளை எப்படி எழுத்தால் எழுதுவது. என்று தெரியாமல் உள்ளே இருப்பவர்கள் யோசித்தார்கள். அதற்குள் இடைக்காடர் மேலே சில பாடல்களைச் சொல்லிவிட்டார். அவர் பாடி முடித்தவுடன் சங்கப் புலவர்கள், “இந்த நூல் எங்களிடம் இருக்கிறதே!” என்று சொன்னாா்கள். இடைக்காடர், “எங்கே எடுத்துவரச் சொல்லுங்கள்” என்று கேட்டார். உள்ளே இருந்த எழுத்தாளர்களை வருவித்து ஏட்டைப் பார்த்தபோது அரையும் குறையுமாக எழுதியிருந்தார்கள். திருட்டு வெளிப்பட்டுவிட்டது. “இனி இப்படிச் செய்யாதீர்கள்” என்று சொல்லிவிட்டுப் போனாராம் இடைக்காடர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/97&oldid=1151466" இலிருந்து மீள்விக்கப்பட்டது