பக்கம்:புது மெருகு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில குறிப்புகள்

127

தேவரும் குருவும்:

சீவக சிந்தாமணியின் உரையில் நச்சினார்க்கினியர். 'செம்பொன் என்னும் கவியால் குருக்கள் அருகனை வணங்குதலின் தாம் சித்தனை வணங்கினார். குருக்கள் கூறுதலானும் அருகனை வணங்குதலானும் அதனை முன் வைக்கவெனின், அவர், "இது நன்று; இதனை முன்னே வைக்க" என்றலின் முன் வைத்தார், என்று எழுதிய குறிப்பு இக்கதைக்கு ஆதாரம்.

ப. 73. திருத்தக்க தேவரைப் பாராட்டி அவருடைய குரு பாடிய செய்யுள் வருமாறு:

முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்து
      வாய்முரன்று முழங்கி யீன்ற
மெய்ந்நீர்த் திருமுத் திருபத்தேழ்
      கோத்துமிழ்ந்து திருவில் வீசும்
செந்நீர்த் திரள்வடம்போல் சிந்தா
      மணியோதி உணர்ந்தார் கேட்டார்
இந்நீர ராயுயர்வர் ஏந்துபூந்
      தாமரையாள் காப்பா ளாமே. (3143)

இது தேவர் குருக்கள் கூறினாரென்றுணர்க: தேவர் இங்ஙனம் புனைந்துரைத்தல் ஆகாமையின்' என்பது நச்சினார்க்கினியர் குறிப்பு.

மூங்கிலிலை மேலே

இவ்வரலாற்றைக் கூறினவர்கள் என் ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள்.

'தூங்குபனி நீர்' என்பதற்கும் தொங்கும் பனிநீர் என்று சிலர் பொருள் கொள்வர். இலக்கிய வழக்காகிய தூங்கு என்பது நாடோடிப் பாடலிலும் வருதல் கூடுமானாலும் பாட்டின் எளிமையை அது கெடுக்கிறது. அன்றியும் இலை மேலே தொங்குவதைவிடத் தூங்குவதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/132&oldid=1549659" இலிருந்து மீள்விக்கப்பட்டது