பக்கம்:புது மெருகு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

புது மெருகு

கின்றனர். வட்டமிட்டு என்ன பயன்? அவர்களுடைய வேலும் வாளும் இந்த நிலையில் ஒன்றுக்கும் பயன் படா. வில்லும் அம்பும் கொண்டு பறம்பு மலையின் உச்சியைத் துளைக்கப் பார்க்கிறார்கள். அதைவிட வானுலகத்தைத் துளைத்துவிடலாம். கையோய்ந்து காலோய்ந்து உடல் ஓய்ந்து உள்ளம் ஓய்ந்து நிற்கும் அந்தப் பெரும்படையின் இடையே தங்களுடைய திருவோலக்கத்தை நிருமித்துக்கொண்ட மூன்று மன்னர்களும் கூடி ஆலோசிக்கலானார்கள்.

பாரி முன்னூறே ஊர்களை உடைய பறம்பு நாட்டை ஆளும் சிற்றரசன். பறம்புமலையின்மேல் அமைந்தது அவன் இராசதானி. சிற்றரசனாக இருந்தாலும் அவனுடைய பெரும் புகழ் வையம் அளந்து வானம் முட்டியது. இயற்புலமை விஞ்சிய புலவர்களிடத்தும், இசைத் திறமை கொண்ட பாணர் பாலும், நாடகத்தில் தேர்ந்த விறலியர் திறத்தும் அவன் காட்டிய பேரன்புக்கு எல்லை இல்லை. சிறந்த ரசிகசிரோமணி. பெரு வள்ளல். புலவருக்கும் பாணருக்கும் விறலியருக்கும் அவன் அளிக்காத பொருள் இல்லை. பொன் கொடுப்பான், பொருள் கொடுப்பான்; ஊர் அளிப்பான், நாடு நல்குவான்;குதிரையும் யானையும் கொடுத்து உதவுவான்; அவர்கள் வேண்டினால் தன்னையே கொடுக்கவும் முன்வருவான்.

கலைச்சுவை தேரும் பண்பும், கரவாத ஈகையும் உடைய அவனுடைய புகழ் எங்கும் பரவியது. அவனுடைய சிறப்பைப் பின்னும் பன்மடங்கு மிகுவிக்கக் கபிலர் அவனுடன் இருந்து வாழ்ந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/21&oldid=1548613" இலிருந்து மீள்விக்கப்பட்டது