பக்கம்:புது மெருகு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றுகை

17

தார். புலனழுக்கற்ற அந்தணாளரும் புலவர் அடி பணிந்து போற்றும் கவிப்பெருமானும் ஆகிய அவர் பாரிக்கு உயிர்த்தோழராக இருந்தார். தமிழ்ச் சுவையூட்டும் ஆசிரியராகவும், புலவர்களை வரவேற்று உபசரிக்கும் பிரதிநிதியாகவும், அவைக்களப் புலவராகவும், அரசியல் துறையில் பாரிக்கு ஏற்ற மந்திரத் தலைவராகவும் விளங்கினார். அவனுடைய பெண்களாகிய அங்கவை,சங்கவை என்னும் இருவரையும் தம் கண்மணிபோலப் பாதுகாத்துத் தமிழ் பயில்வித்து வந்தார். அழகிலே சிறந்து விளங்கிய அவ்விளம் பெண்கள் கபிலரது பழக்கத்தால் அறிவிலும் ஒழுக்கத்திலும் பெண்களுக்கு வரம்பாக நின்றனர்.அவர்களாலும் பாரியின் பெருமை உயர்ந்தது.

இவ்வளவு சிறப்புகளையும் பாரியிடம் வந்து பரிசு பெற்றுச் செல்லும் புலவர்கள், உலகத்துக்குத் தங்கள் வாய் முரசால் அறிவித்தனர். பெரிய மண்டலங்களுக்கு அதிபதிகளாய், பாரியைப் போன்ற பல குறுநில மன்னர்களுக்கு மன்னர்களாய், புலவர் கூட்டங்களையும் கலைஞர் குழாங்களையும் இறையிலியும் முற்றூட்டும் அளித்து நிலையாகப் பாதுகாக்கும் பெருவண்மையராய், படையாலும் பலத்தாலும் கொடையாலும் குலத்தாலும் நாட்டாலும் நகராலும் குறைவின்றி நிறைவு பெற்ற வளத்தினராய் விளங்கிய சேர சோழ பாண்டியர்கள் காதுக்கும் பாரியின் புகழ் எட்டியது. எட்டியதோடு மட்டும் அல்ல. அவர்கள் செவி வழியே அம்பு போல நுழைந்து உள்ளத்தே பாய்ந்து புண் படுத்தியது. புண்ணிலிருந்து பீரிட்டெழும் குருதிபோலப் பொறாமைத் தீ புறப்பட்டது. 'முன்னூறே ஊர்களையுடைய ஒருவேள் இவன். இவனுக்கு இத்தனை புகழா! இந்தப்

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/22&oldid=1548615" இலிருந்து மீள்விக்கப்பட்டது