பக்கம்:புது மெருகு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

புது மெருகு

இவ்வளவு அழகிய ஓவியத்தைப் பின்னும் விரித்து அமைக்கும் சித்திரம், அழகிலும் விரிந்துதானே இருக்க வேண்டும்? ஏற்றக்காரன் அந்த அரை அடியைத்தான் சொன்னானே ஒழிய அதை லேசில் முடிப்பவனாக இல்லை. சுகமாகத் தூங்கிக்கொண் டிருந்த பனி நீரை அங்கிருந்து எடுத்து அந்தரத்திலே விட்டுவிட்டால், அந்தப் பனி நீருக்கு உயிர் இருந்தால், அது எப்படித் துடிக்கும்?-கம்பர் உள்ளம் அப்படித்தான் துடித்தது. 'பனி நீரை, பனி நீரை' - 'அடுத்தபடி என்ன?' இந்தக் கேள்விக்கு விடையை அவர் கவனத்தோடு எதிர்பார்த்தார்; ஏமாந்து போனார். ஏற்றக்காரன் அன்றைக்கு ஏற்றத்தை நிறுத்தி வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான். பனிநீரை அந்தரத்திலே விட்டுவிட்டுக் கம்பரின் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியையும் புகுத்தி விட்டு அவன் போய்விட்டான்.

'பாட்டு எப்படி முடியும்? மூங்கில் இலைமேலே தூங்கு பனி நீரை யார் பார்த்தார்கள்? சோலைக் குயில் வந்து குடித்ததா? மழலை வண்டு வந்து பார்த்ததா?' -என்ன என்னவோ நினைத்துப் பார்த்தார். அப்படியே நெடு நேரம் நின்று சிந்தித்தார். ஏற்றக்காரன் போட்ட முடிச்சு அவிழ்கிறதாகக் காணவில்லை.

தம் இருப்பிடம் சென்றார். இரவு முழுவதும் அவருக்குத் தூக்கம் இல்லை. தூங்கு பனி நீரின் மேல் உள்ளம் படரத் தூங்காத இரவாக அது முடிந்தது. அந்தப் பாட்டின் சித்திரம் மூளியாக நிற்க, அதை வண்ணமிட்டு நிறைவுறுத்த வழியில்லாமல் அவர் உள்ளங் குலைந்து அலந்துபோனார். 'எப்பொழுது விடியும்!' என்று இராப் பொழுதைக் கழித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/83&oldid=1549292" இலிருந்து மீள்விக்கப்பட்டது