பக்கம்:புது மெருகு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வணங்கா முடி

ராமநாதபுரத்து அரசர்களாகிய சேது, வேந்தர்கள் தமிழ்ப் புலவர்களைப் பாதுகாத்துப் புகழ் பெறுவதில் பெரு வேட்கையுடையவர்கள். சங்க காலத்திற்குப் பிறகு அங்கங்கே சிற்றரசர்களுடைய வள்ளன்மையால் தமிழைக் கைவிடாமல் வாழ்ந்து வந்த புலவர்கள் பலர். அவர்கள் அவ்வப்போது தம்மைப் பாதுகாத்த உபகாரிகளைப் பாடிய பாடல்கள் பல. சேதுபதிகளால் ஆதரிக்கப்பெற்ற தண்டமிழ்ப் புலவாணர் பாடிய பாடல்கள் எவ்வளவோ இருக்கின்றன.

ரகுநாத சேதுபதி என்ற அரசர் தமிழன்பும் வள்ளன்மையும் மிக்கவர். அவருடைய ஆஸ்தானத்தில் அமுதகவிராயர், அனந்த கவிராயர், சவ்வாதுப் புலவர், சர்க்கரைப் புலவர் முதலிய புலவர் பலர் இருந்து விளங்கினர். சவ்வாதுப் புலவர் முகம்மதியர். தமிழில் நினைத்தபோது நினைத்த பொருளை விசித்திரமாக அமைத்துப் பாடும் ஆற்றல் உடையவர்.

ஒருநாள் புலவர்கள் கூடியிருந்த சபையில் நடு நாயகமாய் ரகுநாத சேதுபதி வீற்றிருந்தார். புலவர்கள் மிக்க இடத்தில் தமிழையன்றி வேறு எதைப் பற்றிப் பேச்சு நிகழப் போகிறது? அங்கே இருந்த மதிமந்திரிகளுள் ஒருவர் புலவர்களை நோக்கி, " இன்று மகாராஜாவைப்பற்றி ஓர் அழகான செய்யுளை நீங்கள் இயற்றவேண்டும்" என்று சொன்னார்.

"பாட்டில் என்ன பொருளை வைக்க வேண்டும்?" என்ற கேள்வி அடுத்தபடி பிறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/96&oldid=1549604" இலிருந்து மீள்விக்கப்பட்டது