உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புது வெளிச்சம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'வேண்டுதல் எனின், ஒரு உயிருள்ள மனிதனின் விருப்ப வெளிப்பாடு' என்பது தெளிவு. இது எப்போது பொருளுள்ளதாகிறது எனின் தன்னைப் போன்ற உணர்வுள்ள இன்னொருமனிதனிடம், தன் இயலாமையை விளக்கிக் கூறி உதவுமாறு கோரும் போது, மற்றவன் அதுகேட்டு தன்னால் அது சாத்தியமுள்ளதாயின், வேண்டிக் கொண்டவன், அதற்குப் பாத்திரமானவனாயிருப்பின் கடப்பாட்டுணர்வோடு அவன் வேண்டுதலை ஏற்று நிறைவேற்றுதல் எனும் போது மட்டும் பொருளுடையதாகும். ஆனால் உணர்வற்ற, தெய்வமுட்பட மற்ற உயிருள்ள வேறு எந்த ஒன்றினிடமும் பிரார்த்தனைக்குப் பொருள் கிடையாது, என்பது சிந்தித்துப் பார்க்கும் போது தெளிவுபடுகிறது. நமக்கு வேண்டிய ஒன்று, - அது எதுவாகவேனும் இருக்கட்டும் அதை நாமே தேடிக்கொள்ள வேண்டியதுதான் விதிமுறை. இதனைச் சிந்தித்தறியாது வானைநோக்கியோ, கோயிலுள்ள உருவை நினைத்துக்கொண்டோ பிரார்த்தனை செய்தல் மூடத்தனம். அறியவுள்ளதனை அறியாத பலவீனம், அல்லது வரன் முறையாக வந்துகொண்டிருக்கும் பழக்கத்தின் பாற்பட்டதேயாகும். 'விழலுக்கு நீர் இறைத்தல்' என்ற வழக்கு சொற்றொடர் இந்தப் பிராத்தனைக்கு மிக நல்ல முறையில் பொருந்துகிறது, என்று நான் சொல்லிவிட எண்ணுகிறேன்.

பிரார்த்தனை செய்து காரியம் சாதித்துக்கொள்வதற்கேற்ற உணர்வுடைய ஒரு தெய்வம் பிரபஞ்சத்தில் இருப்பதாக நினைப்பது ஒருவித பிரமை அதாவது அறியாமை. உபநிசத்துக்கள் இந்த மாதிரியான ஒரு தெய்வமிருப்பதை ஒத்துக்கொள்வதில்லை. ஆராய்ச்சி அறிவு ஒத்துக்கொள்வதில்லை. இது உண்மைக்குப் புறம்பான நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. இதை விளக்குவது சற்று கடினமானதுதான் எனினும் விளக்கியே தீரவேண்டியது நமது கைவிடக்கூடாத கடமையாகிறது.

காலாடி சங்கராச்சாரி ஆரியமில்லாதாராகிய நமக்கு கருணை பாலித்து இலவசமாகக் கொடுத்த அந்த ஐந்து தெய்வங்களும் உண்மையில் தெய்வங்களல்ல. அவைகளை உபநிசத்துகள் தெய்வங்கள் என்று கூறாது அபரப் பிரம்மம் எனப் பெயரிட்டுள்ளது. அச்சரப் பொருள்கள் என்கிறது.

88

கவிஞர் வெள்ளியங்காட்டான்