பக்கம்:புது வெளிச்சம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அது இந்து மதத்தில் புகுத்தப்பட்டு, மக்கள் மனங்களில் அழுந்தப் படியச் செய்யப்படுவதும் நடைமுறையில் இன்றும் இருந்து வருகிறது.

புனர்செனனக் கோட்பாடுபற்றி இங்கு அலசி ஆராயப்படுவதற்குமுன் இதற்கான ஒரு சிறியசெய்தியை கூறிவிடுவது நல்லதெனக் கருதுகிறேன்.

சாணக்கியனின் அர்த்தசாத்திரம் கூறுகிறது. அந்தக் காலத்தில் ஒரு ரிசியினிடமிருந்து கல்விகற்றுக்கொள்ளும் மாணவன் முதலிலிருந்து முடிவுவரை அனுசரிக்க வேண்டிய நடைமுறைகள் எட்டு, என்று அவையாவன : பிசிசுருசை, சிரவண, கிரகண, தாரண, யூக, அபோவூக விஞ்ஞான, தத்வாரு நிவேச என்பனவாம். இவற்றில், அபோவூக எனும் ஒன்றின் பொருள், ஆசிரியரால் போதிக்கப்பட்டிருந்தாலும் அறிவுக்குப் பொருந்தாதவற்றை அறவே வெட்டித் தள்ளிவிடு, என்பதே.

எனவே, தொன்று தொட்டு இருந்து வருகிறது என்ற காரணத்திற்காக நாம் மேற்கொண்டொழுகியே தீரவேண்டும் என்று நம்மையாரும் தடுத்து நிறுத்திவிட முன்வர வேண்டாம். இதுவுமன்றி, இவன் ஆரம்பக்கல்வியைக் கூடச் சரிவரக் கற்காதவன் என்று குற்றம் கூறவும் துணிய வேண்டியதில்லை. ஏனெனில் என் வயது இந்த சூலை இறுதி மூன்றுநாள் கழிந்து வரும் ஆகஸ்டு 21ம் கழிந்த மறுநாள் எண்பத்தி இரண்டாம் வயதில் வாழத்தொடங்கி விடுகிறேன். எதற்காக இங்கு இதைச் சொல்கிறேன். எனில் என் படிப்பை நான் இன்னும் முடித்துக் கொள்ளவே இல்லை, 'இன்றும் படித்துக்கொண்டே இருக்கிறேன்' என்ற உண்மையை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்காகவேதான்.

ஏதோ ஒருகாலத்தில் வாழ்ந்த ஒருவர். மனித சமுதாயத்திற்கு இது நன்மை தரும் என நம்பி உரைத்த எந்த ஒரு கருத்தையும் ஆராய பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமை எனக்கும் உண்டு. அந்த உரிமையை நான் எடுத்துக்கொள்வதில் யாரும் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் இன்றைய நமது பாரத சமுதாயம் சீர்கெட்டிருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

புது வெளிச்சம்

55