பக்கம்:புது வெளிச்சம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனால் தன்னைத் தானறிந்த ஆத்மஞானிதுலசரீரம் விட்டபின், காரணசரீரம் - மகாத்மா, ஜவாஹர் என மறுபிறப்பை பெற்று சிரஞ்சீவிகளாக உள்ளனர். பாரியும், காரியும், திருவள்ளுவரும், திருத்தக்க தேவரும் போன்றவர்களின் மறுபிறப்பு இதுவன்றி வேறில்லை. செயத்தக்க செய்யாது வெறும் சோற்றுப் பிண்டங்கள். பிறந்தான், இருந்தான் இறந்தான் எனும் சொற்களோடு முடிந்து விடுகிறது; எனினும் அவனுடைய மறுபிறப்பு அவனுடைய சந்ததிகள்.

சென்ற வருடம் நான் ஒரு அவரை வித்தை நட்டேன். அது முளைத்துப் படர்ந்து பந்தல் நிறையக் கூடை கூடையாகக் காய்த்தது. நல்லமுறையில் நாங்களும் அண்டையயலாரும் பற்பல தடவைகள் சாப்பிட்டோம். அதே செடி தனக்கு என்று சிலகாய்களை உலர்த்தி வைத்திருந்தது. அதில் இரண்டொரு விதைகளை இந்த வருடமும் நட்டேன். அதே நிறம், அதே ருசி, அதையே அடுத்த வருடமும் நடவுள்ளேன். எனவே பிறவி என்பது தனித்த உயிர்போய் எங்கும் பிறக்கமுடியாது.

எனின் 'புனர் செனனம்' என்பது அவர்கள் சொல்லும் அர்த்தத்தில் பொய்; ஆம் முழுப்பொய். தாயும் தந்தையும் வாழுங்காலத்திலேயே தம்மை ஆணும் பெண்ணுமெனக் குழந்தைகளாய் மாற்றிக் கொண்டு விடுகிறார்கள்.

மாடுகள், மாடுகளை உண்டுபண்ணிக் கொண்டுவிடுவது போல் ஆடு, கோழி, குருவி, மரம், செடி கொடியனைத்தும் தம்மை தாமே உண்டுபண்ணிவிட்டுத் தான் உயிரை விடுகின்றன. இதுதான் புனர் செனனம் என்றால் அது மிகவும் சரியானது என்று முடிவு செய்கிறேன்.


இளமையிலும் சரி, முதுமையிலும் சரி மடமைக்கு கடமை
உணர்வு இருந்ததாகத் தெரியவில்லை.
- வெ.

புது வெளிச்சம்

59