பக்கம்:புது வெளிச்சம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



'ஒரு நாள்' எனும் காலத்தில், இரவும் பகலும் அடங்கியிருப்பது போன்ற நிலையில் உள்ளவை இந்த இரண்டு சொற்களும். இரவும் பகலும் மனிதனையாக்கி வைப்பது போன்றே பராததீனமும் சுயாதீனமும் அதிக நுட்பமாக மனிதர்களை ஆக்கி வைக்கவுள்ளன. அதிலும் அவர்கள் அறிந்து கொள்ளாமலே அவர்களை ஆளும் மாபெரும் சக்தி பராதீனத்துக்குத்தான் சர்வ மானியமாக ஒதுக்கிவிடப்பட்டுள்ளது.

சிந்திக்கும் பழக்கம் படியாத, காரணகாரியத்தின் இயல்புகளை ஊன்றி உணராத பாமரன், பணக்காரன், படித்தவன் என உள்ள அனைவரும் இந்தப் பராதீனத்தில் மாட்டிக் கொண்டு பகவானே, பகவானே என ஒலமிட்டுக் கொண்டுள்ளனர். அதிகார வர்க்கத்தினருக்கும் இதிலிருந்து விதி விலக்கில்லை.

எல்லாருடைய இதயங்களும் 'இந்து மதம்' என்ற பெயரில் பக்தி என்ற பட்டியில் அடைக்கப்பட்டுள்ளன. அப்படி அடைத்தவர்கள், ஆதிசங்கராச்சாரி, ராமானுஜாச்சாரி, மாத்துவாச்சாரி எனும் மூன்றே மூன்று பேர்தான். அதற்குப்பின், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எனப்பலரும் தோன்றித் தோன்றி குடியானவன் தன் மந்தைகளைக் காப்பதுபோல் மக்களை சுயாதீனத்திற்குப் போகவிடாமல் வெகு எச்சரிக்கையாகக் காத்து வந்தனர், தற்போதும் காத்து வருகிறார்கள்.

பராதீனத்திற்காட்பட்டவன் மனதில் பயம் மண்டிக்கொண்டு விடுகிறது. அதாவது சாமிபயம்; பேய் பிசாசுபயம்; மேலதிகாரிகள் பயம்; பணக்காரர்களின் பயம்; நோய் நொடிகளின் பயம்; பயம், பயம் பயம்! இருட்டில் வாழ்கிறவன் பயந்தே தீர வேண்டியது இயற்கையின் நியதியல்லவா! இவர்களின் உடலில் பலமிருந்தும் உள்ளத்தில் பயம் உதித்துக் கொண்டே உள்ளது.

நோய் காரணமாக ஒருவர் மருத்துவனையை நாடுவதுபோல் பயங்காரணமாக இன்றைய சமுதாயம், இந்தச் செயற்கை விக்கிரக தெய்வங்களை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உபநிசத்துக்களின் கருத்துக்கு முற்றிலும் மாறான - பொய்யான நிலையிது. சரியான வழியைத் தவற விட்டுத் தடுமாறும் நிலைதான் இன்றைய சமுதாய நிலை.

புது வெளிச்சம்

77