பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதையுமே முற்ற முடிந்த பொருளென்று குறிக்க முடியாத நிலையிலிருக்கும்போது, மனிதன் மட்டும் தான் நெடுநாள் நிலையாக இருப்பதாக எண்ணிக் கொண்டு, 'நான்' என்றும், 'எனது' என்றும் கற்பித்துக்கொண்டேயிருக்கிறான். அவனது வாழ்வு என்பது என்ன? அவன் சிந்தனா சக்தியுள்ளவன். அவனது சிந்தனையே வாழ்வின் சின்னம். மனத்தில் ஒரு கருத்து ஏற்படும்போதுதான் அவன் வாழ்கிறான். அந்தக் கருத்து முடிந்ததும், அவன் மாள்கிறான். மறுபடி ஒரு கருத்து முளைத்ததும் அவன் வாழ்கிறான், மறுபடி மரணம். பெளத்த சமயத்தில் இதற்கு உதாரணமாக வண்டிச் சக்கரம் கூறப்படுகிறது. சக்கரம் சுற்றுவதாலேயே வண்டி ஒடுகிறது. ஆனால் முழுச் சக்கரம் எப்பொழுதாவது சுற்றுகிறதா? சக்கரத்தின் ஒரு சிறு பாகமே எப்போதும் தரையில் படுகிறது. மற்றப் பெரும் பகுதி தரைக்கு மேலேயே யிருக்கிறது. இப்படிப் பல பகுதிகளும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோய்ந்து செல்வதைப் பார்த்துச் சக்கரமே சுழல்வதாயும், வண்டி ஓடுவதாயும் சொல்கிறோம். வித்து, செடி, மரம் - இவை மூன்றும் ஒரே பொருளா? வித்திலிருந்து செடி வந்தது உண்மைதான், மரத்திற்குக் காரணமான உதவியாயிருந்தது வித்துத்தான். எனினும் மூன்றையும் ஒன்றாகக் கருத முடியாதல்லவா? இவைகளைப் போலவேதான் மனிதன் வாழ்வும். அவன் மனத்தில் மாறி மாறிச் சிந்தனைகள் தொடர்ச்சியாகத் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு சிந்தனையும் நிகழும் காலத்தின் அளவே அவன் வாழ்கிறான். 'கழிந்துபோன கணத்தில் ஒரு சிந்தனையைப் பெற்றிருந்த ஜீவன் வாழ்ந்திருந்தது, ஆனால் இப்போது வாழவில்லை. இனியும் வாழாது." 'இனி வரப்போகும் கணத்தில் ஒரு சிந்தனையைப் பெறக்கூடிய ஜீவன் இனி வாழும். ஆனால் முன்னால் வாழ்ந்திருக்கவில்லை. இப்போதும் வாழவில்லை." 'இப்போது நிகழும் கணத்தில் ஒரு சிந்தனையைப் பெற்றுள்ள ஜீவன் இப்போது, வாழ்கிறது. ஆனால் முன்னால் வாழ்ந்திருக்கவில்லை. இனியும் வாழாது * என்று ‘விசுத்தி மார்க்கம்' என்ற விழுமிய நூல் எடுத்துரைக்கின்றது. சிந்தனையே வாழ்க்கை; சிந்தனையற்ற நிலையில் மனிதன் வாழவில்லை. - எனவே, கருவிலிருந்து கிழவன்வரை, ஒரே மனிதனாக நாம் காண்பது உண்மையில்லை. பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை ஒரே தொடர்ச்சியாக நாம் கருதுகிறோம். ஆகையால் மனிதன் வாழ்வு கருத்துக்களின் தொடர்ச்சியாகவே உள்ளது. 74 புத்த ஞாயிறு