பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தெளிவித்தல்


"நுண்ணறி வொன்ற நோற்று
நூறு நூல் பயின்ற போதும்,
பெண்ணறி வென்ப தென்றும்
பேதமைத்' தெனவே பேசும்
மண்ணுறு மனிதர் கூற்றை
மறுக்கவே இயலா தென்னக்
கண்ணுறு காட்சி யாகிக்
கலங்குதல் தவிர்க, கண்ணே !

முயல்களைக் கொன்று தின்றே
மூப்புற்ற முட்காட் டோநாய்,
வெயில்களைப் பறுதல் வேட்டு
விரிமலர்க் காவை மேவித்
துயில்களைந் துறும்ப சிக்குத்
துப்பாக நோக்கிற் றேனும்,
மயில்,கிளை மீதிற் குந்தி
மாங்குயி லிசைமாந் தும்மே!

வானத்தில் நிலவை
வாரி வழங்கிடும் மதிபோல், வையம்
ஞானத்தி லொளிர நாடி
நல்லவை நவின்ற போதும்,
ஈனத்தி லிதயம் வைத்தோர்
எதிர்த்ததை யிகழ்தல் மெய்;தன்
மானத்தில் மனது வைத்தோர்
மகிழ்ந்ததைப் புகழ்தல் மெய்யே!

வேதனை வெறுமை, வீட்டில்
வேரொடுங் களைய வேண்டின்
சோதனை செய்வ தன்றிச்
சூக்கும மினிவே றில்லை!
போதனை புரிந்து போதைப்
பொன்னாக்கும் புதிய சக்தி
சாதனை செய நான் செல்வேன்
சமர்த்தாகி யிரு நீ சார்ந்தே !