பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஊரும் பேரும்

வண்டியும் வகையாய் வந்து
வாய்த்ததன் றெனக்கு! வாழ்த்தைக்
கொண்டஇத் தோழன் கொள்ளக்
கோட்பாடு கூறு தற்கென்
மண்டையும் மலர்ந்து முல்லை
மனங்கூட்டு மெனவே , "நண்பா !
உண்டுறை கிறவுன் னூர்பேர்
உரைக்கும்போ துற்ற" தென்றேன்.

"வான்கொண்ட நீரை வாங்கி
வைக்கின்ற வைய மெல்லாம்
தான்கொண்ட போதும், தக்க
தலைமைசால் கோட்பா டொன்றத்
தேன்கொண்ட தமிழ்வல் லோரைத்
தேடாரின் தேட்டம், தேரா
மீன்கொண்ட தூண்டில் வாழ்வாய்
மீளார்பட்" டென்பர் மேலோர்!

அம்புவிக் களிப்ப தற்காம்
அருஞ்சுனை யருவி யுண்டு;
தும்பிகள் சுவைத்துத் துய்க்கத்
தூமலர்த் தருக்க ளுண்டு;
கொம்புகாய், கனி, தேன் கொண்ட
குன்றுண்டு; குடிகொள் ளற்குக்
கெம்பனு ருண்டங் கையா!
கிளைஞரோ டிணைந்துய் தற்கே!

அட்டுக்கல் லருவி! ஆஆ..!
அழகிய லமைப்பஃ தையா!
பட்டுக்கற் பாறை மேல்,நீர்
பளிங்காகிப் பாயும்! பாரோர்,
எட்டுக்கல், பத்துக் கல்,-ஏன்
எங்கெங்கோ - இருந்து வந்தோர்
மட்டுக்கல் லாராய்த் தம்மை
மறந்தும்நீ ராடு வாரே!