பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

'பொறிவாயி லைந்த வித்தான்,
பொய்தீர் நல் லொழுக்க மென்னும்
நெறிவாயில் நின்றார், நின்று
நீடுவாழ் வார்க' ளென்றிங்
கறிவாயில் திறக்கும் நல்லா
சிரியனைக் கடவுள் பக்தித்
தறிவாயில் பிணைத்தான், கற்போர்
தடம்மாறித் தவிக்கு மாறே!

'தேனக மெனத்தித் திக்கும்
திருக்குறள் திருத்தம் தேரா
தூனக மாகி மக்கள்
உடலினைச் சுமப்பா' ரென்று
நானகம் நொந்து திர்த்தேன்
நன்முத்துப் போன்று கண்ணீர்,
கானகச் சுனைக ளாகிக்
கடலுற்றுக் கலங்கு மாறே!

நூலில்கண் நுழைத்தா ராய்ந்து
நுனியடி நோக்கார்; நோகக்
காலில்கல் தட்டக் கண்டும்
கடுத்தெடுத் தெறியார்; கண்முன்
பாலில் புல் தூசு வீழ்ந்தும்
பார்த்ததை யகற்றார்; 'பச்சை
யாலில்கண் வளரா நிற்கும்
ஆண்டவன் செய'லென் பாரே!

‘ஏடென இருப்ப தெல்லாம்
இல்லாத கடவு ளேடாய்,
வீடென இருப்ப தெல்லாம்
வெளிச்சமே யின்றி, வேறு
கேடென இருப்ப தெல்லாம்
கிளையாகி விட்ட' தென்றே
நாடென இருப்ப தெல்லாம்
நகைப்பதும் நமைக்கண் டன்றோ?