உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

புராண-மதங்கள்

கள் இந்த வருஷம் உற்சவத்தை நடத்தாமல் இருந்து விடுவார்களோ என்று எனக்கு இலேசாகப் பயம் அவர்கள் உற்சவத்தை வழக்கப்படி நடத்த முன்வரவே நான் மகிழ்ச்சி அடைந்தேன்—எவ்வளவு பிரச்சாரம் நடைபெற்றாலும் நமது செல்வாக்கும் போய்விடவில்லை, என்று எண்ணிப் பூரித்துப் போனேன். வருஷா வருஷம் வைகாசி மாதம் உற்சவம் நடத்துவார்கள் எனக்கு கருப்ப உடையார் தலைவர், உற்சவம் நடத்திய பக்தர் குழாத்துக்கு-வழக்கப்படி ஊர்வலமாக என்னை அழைத்துச் சென்றார்கள். "பயல்களே! பகுத்தறிவு—சுயமரியாதை என்று கருதிக்கொண்டிருக்கிறீர்களே—பாருங்களடா, பக்தர்கள் எனக்கு உற்சவம் கொண்டாடுவதை" என்று கூறிட எண்ணினேன்—ஆனால் அந்தப் பயல்கள் ஒருவன்கூட காணோம்—எங்காவது 'மஹா நாடு' போட்டிருப்பான்கள் போலிருக்கு. சந்தோஷமாகப் பவனி வந்தேன். எப்போதும்போல என்னைக் கொண்டுபோய் மண்டபத்தில் கொலுவிருக்கச் செய்தார்கள். பக்தர்கள் என்னை வந்து தரிசிக்க அதுதானே நல்ல ஏற்பாடு. நானும் மண்டபத்தில் கெம்பீரமாக வீற்றிருந்தேன்.

பக்தகோடிகள் இரண்டு 'கோஷ்டி'யாகி இருந்தனர் என்று சொன்னேனல்லவா—உற்சவம் செய்தது ஒருகோஷ்டி,—கருப்ப உடையார் கோஷ்டி. மற்றொரு கோஷ்டி பிச்ச உடையார் நடத்தி வந்தார்—அந்தக் 'கோஷ்டி'யும் என் பக்தர்கள்தான். அந்த இரண்டு 'கோஷ்டி'க்கும் தான் பகை. இரண்டு கோஷ்டிக்கும் என்னிடம் பகை ஏற்படக் காரணமே கிடையாது.

மண்டபத்தில் இருந்த என்னை மீண்டும் கோயிலுக்கு அழைத்துப்போகக் கூடிற்று கருப்ப பக்தர் கோஷ்டி.

"தூக்காதே! எடுக்காதே!" என்று கூவிற்று பிச்ச பக்தர் கோஷ்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/29&oldid=1697323" இலிருந்து மீள்விக்கப்பட்டது