பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


134. வேள் ஆய் அண்டிரன்

ஒரு சிலர் இப் பிறவியில் செய்த நன்மைகள் அடுத்த பிறவிக்கு உதவும்; நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்துச் செய்கின்றனர். இது வணிகப் போக்கு.

இவன் ஏன் தருகிறான்? சான்றோர் சாற்றும் நெறி இது என்பதால்தான் தருகிறான். அதனால்தான் இவன் ஈதல் செய்கிறான். வள்ளன்மைக்கு இதுதான் காரணம்.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறி என,
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே.

திணை - அது; துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

135. வேள் ஆய் அண்டிரன்

புலிகள் வழங்கும் மலைச்சாரல் அவற்றின் வளைவுகளில் விறலி என்னைப் பின் தொடரப் படுமலைப் பாலையைப் பாடியவனாய் உன்னை நினைத்துக் கொண்டு யான் வந்துள்ளேன்.

யான் உன்னைக் காண வந்தது யானையோ தேரோ புரவியோ பரிசிலாகக் கேட்டுப் பெறுவதற்கு அன்று.

நீ கேட்டுத் தருவது இல்லை; வருகிறவர் எதை விரும்புகிறார்களோ அதை அவர்களே எடுத்துக் கொள்ளச் சொல்கிறாய்; இது உன் இயல்பு.

பகைவர்களை அழித்துப் புகழுடன் விளங்கும் நாடன் நீ! உன்னைக் காணவே விந்துள்ளேன். அதுவே எனக்கு மனநிறைவு தருவதாகும்.

கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை,
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தித்,
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்,
வளைக் கை விறலி என் பின்னள் ஆகப்,