பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புறநானூறு செய்யுளும் செய்திகளும்


தொடர்பு, அறிவுரைகள் தேவை என்பதை வற்புறுத்துகிறது ஒரு பாடல்.

"யாண்டுபலவாக, நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்? என வினவுதிர் ‘ஆயின், மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்; யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே" - 191

அல்லது செய்தல் தவிர்க்க

நல்லது செய்யாவிட்டாலும் தீயது செய்யாமல் இருப்பது மிகவும் தேவை; 'அழிவுக்காகவே அழிவு' என்று தவறாகச் செல்லும் உலகுக்குத் தரப்படும் அறிவுரை இது; நரை மிக்க மூதாளர்க்குச் சொல்லப்படும் அறிவுரை இது; மூத்தவர்கள் செய்யும் தவறுகள் நாட்டைப் பெரிதும் நலிவுறச் செய்யும். ஆற்றல் இல்லை என்றாலும் அடங்கிக் கிடப்பது அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவது; "நாட்டைக் கெடுக்காதீர்" என்று முதியவருக்குச் சொல்லும் அறிவுரை இது.

"பல்சான்றீரே பல்சான்றீரே! கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள், பயனில்மூப்பின், பல்சான்றீரே! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் எல்லாரும் உவப்பது அன்றியும், நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே" - 195

யாதும் ஊரே யாவரும் கேளிர்

புறநானூற்றிலேயே உச்சநிலை இதுதான். சிகரத்தை எட்டிப் பிடித்து இருக்கிறார்கள். இன்று போற்றப்படுவது; பேசப்படுவது 'மனிதநேயம்'; எல்லை கடந்து வாழும் நாள் இது; உலகம் ஒன்று, அனைவரும் நேசிக்கத் தக்கவர்கள் என்ற கருத்தை இது தருகிறது.