பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



காட்டுக்கும் சென்று வெட்டிப் பிழைக்கலாம். அதுபோல

எங்களிடம் இசைக் கலை உள்ளது. அது எங்களோடு ஒன்றியது.

எத்திசைச் சென்றாலும் எங்களுக்குச் சோறு உள்ளது. எங்களுக்குப்

பிழைக்கத் தெரியும்.

- வாயிலோயே! வாயிலோயே!

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்? அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, வறுந் தலை உலகமும் அன்றே; அதனால், காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை, மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றேஎத் திசைச் செலினும், அத் திசைச் சோறே.

திணையும் துறையும் அவை. அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.

207. இளவெளிமான்

இனி இங்கே காத்திருந்து பயனில்லை; பார்த்தும் பார்க்காதது போல நடந்து கொள்ளும் வன் நெஞ்சர்; அவர்களை நச்சிக் காத்திருப்பவர் வெளியே சென்று பிழைக்க அறியாதவர்.

இந்த உலகம் மிகப் பெரிது; கொடுத்து உதவும் உபகாரிகள் எங்கும் பரந்து உள்ளனர்.

மறம் மிக்க ஆளிகள் அவற்றைப் போல் செம்மாந்து நடப்போம். பரந்த உலகம் இது; திறந்த வெளி; சிறந்த பரிசுகள் காத்துக் கிடக்கின்றன; உள்ளம் இல்லாத இவர்களை எதிர் பார்த்து யார் காத்திருக்க முடியும்? உளைச்சல்தான் மிச்சம். உள்ளூரக் கனிந்து வெம்பி அழுகிப் போகும் பழங்களைப் போன்றவர்கள் இவர்கள் யாருக்கும் பயன்படமாட்டார்கள்.