பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


கள் மிகுதி பெற்றால் யான் பாடத் தானும் எங்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்வான்.

உண்பதில் அவன் இவ்வாறே பகிர்ந்து கொள்வான். சிறுசோறு என்றாலும் உள்ளதை எங்களுக்குப் பங்கிட்டுத் தந்துதான் உண்பான். பெருஞ்சோறு என்றாலும் அப்படித்தான்.

எலும்பும் கறியும் என்றால் அவற்றை எங்கள் முன் வைப்பான். அம்பும் வேலும் என்றால் அவற்றைத் தான் தாங்கிப் போருக்குச் செல்வான். உண்பது யாம்; உழைப்பது அவன்.

நரந்தம்பூ மணம் நாறும் தன் கையால் புலவு நாறும் என் தலையை அவன் தடவிக் கொடுப்பான். அந்தக் காலம் எல்லாம் மறைந்து விட்டது. நினைத்தால் அது துயரத்தைத் தருகிறது.

அவன் மார்பில் பாய்ந்த வேல் அது அவன் மார்பில் மட்டும் பாயவில்லை;அவனை நச்சி வாழ்ந்த பாணர் கைப் பாத்திரத்தில் பாய்ந்து ஊடுருவிச் சென்று, இரப்பவர் கையுள்ளும் சென்று அவனால் போற்றப் படும் சுற்றத்தவர் கண்களில் சோகத்தைப் பெருக்கிவிட்டு அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவிலும் சென்று தைத்து விட்டது.

இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோர்க்கு ஒன்று ஈவோரும் இல்லை.

நீர்த்துறையில் தோன்றும் பகன்றைப் பூ அதைச் சூடுவாரும் இல்லை; நாடுவாரும் இல்லை; அதைப் போலப் பிறர்க்குப் பயன்படாமல் வாழ்கின்றவர் பலர் உள்ளனர். அவர்களால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே! பெரிய கள் பெறினே, யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே! சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே! பெருஞ்சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே! என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் மன்னே! அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே! நரந்தம் நாறும் தன் கையால், புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே!