பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

29


5. கோப்பெருஞ்சேரல் இரும்பொறை

எருமைபோல் கற்கள் தோற்றம் அளிக்கும் மலைநாட்டை உடையவன் நீ; மற்றும் யானைகள் பசுநிரைகளைப் போல் பரவி உன் காட்டில் மிக்கு உள்ளன. கானக நாடன்’ என்று உன்னைப் பாராட்டுவர்.

ஈவு இரக்கமற்றுக் கொடுமை செய்யும் கீழ் மக்களது தொடர்பு கொள்ளற்க, அவர்கள் நிரயத்துக்கு வழிகாட்டுவர்.

உன் நாட்டு மக்களைக் குழந்தைகளைப் போற்றுவது போல் காத்து உதவுக. இவையே யான் வேண்டுபவை.

எருமை அன்ன கருங் கல் இடை தோறு, ஆனின் பரக்கும் யானைய, முன்பின், கானக நாடனை நீயோ, பெரும! நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்: அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல், குழவி கொள்பவரின், ஓம்புமதி: அளிதோ தானே, அது பெறல் அருங்குரைத்தே.

திணை - பாடாண்திணை, துறை - செவியறிவுறுஉ பொருண்மொழிக் காஞ்சியும் ஆம.

சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று. நின் உடம்பு பெறுவாயாக! என, அவனைச் சென்று கண்டு; தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.

6. பாண்டியன் பல்யாகசாலை

முதுகுடுமிப் பெருவழுதி

வடக்கே இமயம்; தெற்கே குமரிமுனை, கிழக்கும் மேற்கும் கடல்கள். இவற்றை எல்லையாகக் கொண்ட நிலம் முழுவதும், மேல்நிலை உலகத்தும், கீழ்நிலை உலகத்தும் எங்கும் உன் புகழ் பரவி உள்ளது.

சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் நடுவு நிலையில் நின்று நீதி வழங்குக, செங்கோன்மை நிலவுவதாக.