பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



280. மாறோக்கத்து நப்பசலையார்

என் தலைவன் மார்பில் பட்டுள்ள புண்ணும் கொடுமை மிக்கது. நண்பகலில் வந்து வண்டுகளும் மொய்த்து ஒலிக்கின்றன. நெடு மனையில் ஏற்றி வைத்த விளக்கும் நின்று எரியாது. விரைவில் அணைந்து விடும். தூக்கம் நீங்கிய என் கண்கள் தூக்கத்தைத் தழுவுகின்றன. அச்சம் விளைவிக்கும் கூகையும் கடுமையாகக் குரல் எடுக்கிறது. நெல்லும் நீரும் தெளித்து விரிச்சி கூறும் செம்முது பெண்டும் அழி சொல்லே கூறுகிறாள். அவள் சொற்களில் நம்பிக்கை தோன்றவில்லை.

துடியனே பாணனே பாடல் வல்ல விறலியே! இனி நீவிர் என்ன ஆவீரோ? உமக்கும் இங்கு உறைந்து வாழ்வது இயலாது. யானும் சிறு வெள் ஆம்பல் அரிசி உண்டு வளையல் நீக்கி வாழும் கைம்மை மகளிர் போலத் துயருற்று வாழ வேண்டியதுதான். அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி விட்டான். இனி யான் தனித்து உயிர் வாழ்வது இயலாது; அது மிகவும் கொடியது.

என்னை மார்பில் புண்ணும் வெய்ய: நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்; நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா; துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும், நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா, துடிய பாண பாடு வல் விறலி! என் ஆகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும் இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும் மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வாரத், தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியல் சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் கழி கல மகளிர் போல, வழி நினைந்திருத்தல், அதனினும் அரிதே’

திணை - பொதுவியல் துறை - ஆனந்தப்பையுள்

மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.