பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



287, சாத்தந்தையார்

துடி அடிப்பவனே! பறை அறைவோனே! நீவிர் இதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த வீரர்கள் களத்தில் பொருகிறார்கள்; உயிரும் தருகிறார்கள். ஏன்? எதற்காக?

அம்புகள் வந்து தைத்தாலும், வேல்கள் வந்து பாய்ந்தாலும், யானைகள் தம் மருப்புக் கொண்டு தாக்கினாலும், இவர்கள் புறங்கொடுத்து ஓடாதவர்கள்; மறம் மிக்கவர்கள்.

நாட்டு அரசன் இவர்களுக்குத் தரும் நன்செய் நிலங்களுக்காக அல்ல; பொருட் கொடை கருதி இவர்கள் உயிர்க் கொடை தருவது என்பது இல்லை.

வெற்றிகள் விளைவித்துப் புகழ் நாட்டுவது இவர்கள் குறிக்கோள். வீரமரணம் அடைந்தால் இவர்களுக்குச் சுவர்க்கம் காத்திருக்கிறது. வரவேற்கத் தேவ மகளிர் காத்து இருக்கின்றனர். அவர்களைத் தழுவி நீடித்த இன்பம் இவ்வீரர் அடைகின்றனர். அதனால்தான் அரசனின் சேனை வீரர்கள் மேல் விழுந்து இங்கு வந்து சேர்கின்றனர். அவற்றைக் காண்பீராக!

துடி எறியும் புலைய! எறி கோல் கொள்ளும் இழிசின! கால மாரியின் அம்பு தைப்பினும், வயற் கெண்டையின் வேல் பிறழினும், பொலம் புனை ஒடை அண்ணல் யானை இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும், ஒடல் செல்லாப் பீடுடையாளர் நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும், தண்ணடை பெறுதல் யாவது? படினே, மாசு இல் மகளிர் மன்றல் நன்றும், உயர் நிலை உலகத்து நுகர்ப; அதனால் வம்ப வேந்தன் தானை இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே!

திணை - கரந்தை துறை - நீண்மொழி. சாத்தந்தையார் பாடியது.