பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


பிறர் மண் கொள்ளும் நிலையில் அவர்களுக்குக் கெடுதி செய்கிறாய். இரவலர்க்குப் பொருள் தந்து நன்மை செய்கிறாய்.

ஒருவர் துன்பப்பட மற்றொருவர் சிறப்புடன் வாழ உதவுவது அறம் ஆகுமா?

பாணர் தாமரை மலையவும், புலவர் பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும், அறனோ மற்று இது - விறல் மாண் குடுமி! இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு, இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே?

திணை - அது துறை - இயன்மொழி. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

13. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி

இவன் யார் என்று வினவுகின்றாய்? சோழ நாட்டு அரசன் இவன். களம்பல கண்டவன்; புலித்தோலைக் கவசமாகக் கொண்டு உள்ளான். எதிரிகள் அம்புபட்டு அது கிழிபட்டு உள்ளது.

அவன் தற்போது யானை மீது செல்கிறான். அது மதம் பட்டு உள்ளது. பாகனின் கட்டுக்கு அடங்காமல் அது வெறி கொண்டு உள்ளது. வீரர்கள் சுறாமீன்கள் இனம்போல இரு பக்கமும் மொய்த்துக் காக்கின்றனர்.

கடலில் சூறைக் காற்றில் நிலைதடுமாறிய மரக்கலம் போல் இவ்யானை செல்கிறது; அது நட்சத்திரக் கூட்டத்தின் நடுவில் இயங்கும் திங்களைப் போன்று உள்ளது. இவன் ஊறு இன்றிப் பெயர்வானாக!

வயலில் திரியும் மயில் உகுக்கும் பீலியைக் கழனி உழவர் நெற்கதிரோடு சேர்த்துத் தொகுக்கும் சிறப்புப் பெற்றது; கொழு மீனும் கள்ளும் மிக்கது; காவிரி பாயும் நாடு அவனது.

‘இவன் யார்?’ என்குவைஆயின், இவனே புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய,