பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


16. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

நீ வீட்டு மரங்களை விறகாகக் கொண்டு ஊரை எரித்த சுடுதீயின் ஒளிக் காட்சி சூரியன் மறையும் அந்திப் பொழுதில் தோன்றும் செக்கர் வானத்தை ஒத்திருக்கிறது. -

முருகனைப் போன்ற சீற்றம் உடையவன் நீ பகைவர் நாட்டை எரியூட்டி அழித்தனை, உன் யானைகள் உனக்குத் துணையாக நின்று போர் செய்தன.

பகைவர்கள் வயல்கள் வளம் மிக்கவை. வள்ளைக் கொடியும், ஆம்பல் மலரும், பகன்றைக் காயும், பாகல்கனியும் மிக்கவை; மற்றும் கரும்பு மிக்கு விளையும் கழனிகள் அவை; அவை அனைத்தும் பாழ்பட்டு அழிந்து ஒழிந்தன.

வினை மாட்சிய விரை புரவியொடு, மழை உருவின தோல் பரப்பி, முனை முருங்கத் தலைச் சென்று, அவர் விளை வயல் கவர்பூட்டி, மனை மரம் விறகு ஆகக் கடி துறை நீர்க் களிறு படீஇ எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப் புலம் கெட இறுக்கும் வரம்புஇல் தானைத் துணை வேண்டாச் செரு வென்றிப், புலவு வாள், புலர் சாந்தின், முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்! மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், பனிப் பகன்றை, கணிப் பாகல், கரும்பு அல்லது காடு அறியாப் பெருந் தண் பணை பாழ் ஆக, ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை, நாம நல் அமர் செய்ய, ஒராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.

திணை - வஞ்சி, துறை - மழபுலவஞ்சி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.