பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

67


மற்றும் நகரில் உள்ள சோலைகள்தோறும் கோடரி கொண்டு உன் வீரர்கள் மரங்களை வெட்டி வீழ்த்துகின்றனர். அவற்றை வெட்டும் ஒசையைக் கேட்டும் மதில் சூழ்ந்த அரண்மனையில் இனிது இருக்கிறான் அந்நகர் ஆளும் வேந்தன்.

போர் ஓசை கேட்டும், ஊர் அழிவுகள் அறிந்தும், எதிர்ப்பு இன்றி மக்கள் நலத்தைப் பற்றிக் கருதாமல் ஒதுங்கி வாழ்கிறான். அத்தகைய இழிவுமிக்கவனை எதிர்த்துப் போர் செய்தாய் என்றால் அது உனக்கு நாணத்தைத் தருவதாகும்; இழிவு தரும்.

இனி அவன் மீது போர் தொடுப்பதோ, விடுப்பதோ எது உயர்ச்சியைத் தரும் என்பதை நீ அறிவாய். சிந்தித்துச் செயல்படுக.

அடுநைஆயினும், விடுநைஆயினும், நீ அளந்து அறிதி, நின் புரைமை - வார் கோல், செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர் பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் தண் ஆன்பொருநை வெண் மணல் சிதையக் கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய் நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து, வீ கமழ் நெடுஞ் சினை புலம்பக் காவுதொறும் கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப, ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின் சிலைத் தார் முரசம் கறங்க, மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே.

திணை - வஞ்சி; துறை - துணைவஞ்சி. அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.

37. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

நீ சோழன் சிபிச் சக்கரவர்த்தியின் வழித்தோன்றல், இடி ஒசை கேட்ட நாகம் போல் உயிருக்கு அஞ்சிப் புகல் இடம் தேடிய புறாவின் துயர் தீர்த்தவன்; அச்சோழனின் உயர் மரபில் தோன்றியவன் நீ!