பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

269


பாடியவர்: பெருங்குன்றுார் கிழார். பாடப்பட்டோன். சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி. திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.

(சென்னி என் நல்கூர்மையை வல்லே களைவாயாக எனக் கூறியதனால், இத் துறை ஆயிற்று. 'அறிவு கெட நின்ற நல்கூர்மை’ என்று, வறுமையின் கொடுமையைக் காட்டுகின்றார் புலவர்)

பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக், கயங்களி முளியும் கோடை ஆயினும், புழற்கால் ஆம்பல் அகலடை நீழல் கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம் 5

நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்! வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி! சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், ஆசாகு என்னும் பூசல் போல, வல்லே களைமதி அத்தை - உள்ளிய - 10

விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப் பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன் அறிவுகெட நின்ற நல்கூர் மையே!

வானம் பொய்க்க, நீர் நிலைகளிலே களிகள் வெடித்துத் தோன்றும் கடுமையான கோடை நாளிலும், நீர்வளமிகுந்த நாட்டினை உடையவனே! பெரிய வெற்றியும் உடையவனே! வானமுட்டும் நெடுங்குடையையும், வலிய குதிரையையும் உடைய சென்னியே! அறிவுடையோர் அவையிலே, அஃதற்றான் ஒருவன் சென்று, “யானுற்ற துயருக்கு நீரே துணை என்ன, அவர் விரைந்து அவன் துயரினைத் தீர்ப்பாரன்றே ஐம்பொறியும் குறைவற்ற என் நல்லுடலுடன் தோன்றி, உடலினால் ஆகும் பயன் கொள்ளாத வாறு வறுமை என்னைத் தடுக்கின்றதே! விருந்தினரைக் காண அவர்க்கு விருந்துட்ட வகையற்று ஒளிந்து வாழ்கின்றேனே! என் அறிவும் கெட என்பால் நிலைத்துவிட்ட இந்த வறுமையைப் போக்கி எனக்கு அருளாயோ!

சொற்பொருள்: 1 களிமுளியும் - களியாய் முளியும் என்றது, நீர்நிலையில் நீர் வற்றியபின் உள்ள சேறும் களிமண் போல் இறுகி உலரும் தன்மையாகும் கோடை என்பதாம்.