பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

477


பட்டினத்துக் காரிக்கண்ணனாரும், உறையூர் மருத்துவன் தாமோதரனாரும், வடம வண்ணக்கன் தாமோதரனாரும் ஆவர். 'வடிநவில் அம்பின் வில்லேர் பெரும! கைவள் ஈகைக் கடுமான் கொற்ற' என்று இவன் புகழ் கூறப்படும். இவனைப் பற்றிய வல்லாண் முல்லைத் துறைச் செய்யுள் மிக்க பொருட் செறிவு உடையது; இவனது சிறப்பை நன்றாகக் காட்டுவது.

புல்லி - 385

இவன் வேங்கடமலைப் பகுதியில் இருந்தவன் கள்வர் தலைவன். இரவலர்க்கு உதவுவதில் இணையற்றவன். கல்லாடனாரும் மாமூலனாரும் இவனைப் பாடியுள்ளனர். 'கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான், மழபுலம் வணக்கிய மாவண்புல்லி’ (அகம் 61), பொய்யா நல்லிசை மாவண்புல்லி’ (அகம் 359), நெடுமொழிப் புல்லி என இவன் புகழைச் சான்றோர் பாடுவர். . பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு - 146, 147

பூதப் பாண்டியனின் தேவி இவர்; பாடினோர் வரலாற்றுப் பகுதியுள் இவரைப் பற்றிக் காண்க

பேகன் . 141 - 7, 158

இவன் வையாவிக் கோமான் பெரும் பேகன் என்னும் சிறப்பினை உடையவன். மயிலுக்குப் போர்வை நல்கிய கொடைமடத்தை உடையவன். ஆவியர் குடியினன். இவன் தன் மனைவியான கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்தவன்; சான்றோர் பலர் அறிவுரை கூறக்கேட்டு, மீண்டும் அவளோடு கூடி வாழ்ந்தவன். பரணர், கபிலர், வன்பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றுர் கிழார் முதலியோர் இவனைப் பாடியுள்ளனர். 'உடாஅ போரா வாகுதல் அறிந்தும், படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ என்று பரணர் இவன் கொடையைப் பாடுவர். 'கைவள் ஈகைக் கடுமான் பேக’ என்று கபிலர் பாராட்டுவர்.

பொறையாற்றுக் கிழான் - 391

இவன் தஞ்சைப் பகுதியின்கண் உள்ள பொறையாற்றுாரில் வாழ்ந்த ஒரு தலைவன். இவனைக் கல்லாடனார் பாடியுள்ளனர்.

பொகுட்டு எழினி-96, 102, 392

இவன் அதிகமான் நெடுமான் அஞ்சியின் மகன்; இவனைப் பாடியவர் ஒளவையார். தந்தையைப் போன்றே இவனும் மற மேம்பாட்டிலும், கொடை யாண்மையிலும் சிறப்புற்றவனாக விளங்கினான்.