பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

41


வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை ஆகுமதி: அருளிலர் கொடா அமைவல்லர் ஆகுக! கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந்தோரே.

சேற்றில் வளரும் தாமரையிலே தோன்றிய செந்தாமரை மலரின் நூற்றுக்கணக்கான இதழ்களும், நிரலே உயர்வுடன் தம்முள் வேற்றுமையற்ற குணம் உடையனவா யிருக்கும். அது போல, வேற்றுமை இல்லாத உயர்ந்த குடியில் பிறந்து வாழ்ந்தவ ராயினும், அவருள்ளும் உரையும் பாட்டுமாகப் புகழப்பட்டோர் மிகச்சிலரே யாவர். அத் தாமரையின் இலைபோலப் புகழற்று மாய்ந்தவரே பலர். புலவர் பாடும் புகழ் பெற்றோர், வானின்கண் செலுத்துபவன் இல்லாது தானே இயங்கும் வானவூர்தியிற்

செல்லும் அளவு உயர்வர். அவர்த்ாம் செயத்தகு வினை

யெல்லாம் செவ்வையாக இவ்வுலகத்தே நிறைவேற்றினவர் என, ஆன்றோர் கூறக் கேட்டுள்ளோம். அதனால், எம் இறைவனே! சேட்சென்னியே! நலங்கிள்ளியே! தேய்தலும், பெருகலும், மாய்தலும், பிறத்தலும் உளவென அறியாதோரையும் அறியக் காட்டித் திங்களாகிய தெய்வம் திரியும் வானகத்து உள்ளவ ராயினும், வருந்தி வந்து தம்மைச் சேர்ந்தவரது பசியால் உட்குழிந்த மருங்கை நோக்கி, அவருக்கு அருளவல்லவனாக நீ ஆகுக! வலியுடைய நினக்குப் பகையாகி நின்னை எதிர்த்தோர், அவ்வாறு அருளிலாதோராகவும், கொடுக்கும் நிலையற்றோராகவும் ஆகுக!

சொற்பொருள்: 5 உரை - புகழ். மரையிலை - தாமரை இலை; தலைக் குறை. 8. வலவன் - பாகன் 11. தேய்தல் உண்மையும் வளர்ந்ததொன்று பின் குறைதல் உண்டாதலும். அறியா தோரையும் - கல்வி முகத்தான் அறியாத மடவோரையும். 15. வல்லார் ஆயினும் - ஒன்றை மாட்டார் ஆயினும், 16. மருங்கு நோக்கி உட்குழிந்த அடிவயிற்றைப் பார்த்து.

28. போற்றாமையும் ஆற்றாமையும்!

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல். துறை: முதுமொழிக் காஞ்சி. சிறப்பு: எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம் எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு. . -

('அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும் பெரும நின் செல்வம் என்று உறுதிப்பொருள் மூன்றையும் அறிவித்தனர். ஆதலின், இச் செய்யுள் முதுமொழிக் காஞ்சி ஆயிற்று. அறஞ் செய்யாதானை அறஞ் செய்க என வலியுறுத்திக் கூறியதாகவும் கொள்க)