பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv புதையலெடுத்த செல்வத்தைப்போல இதனைத் தேடி எடுத்து ஆராய்ந்து,செவ்வையாக அச்சிற்பதித்துத் தமிழகத்திற்கு வழங்கிய பெருந்தகையார் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களாவர். அவர்களுடைய வள்ளன்மையின் நிழலில் நின்றே இந்தத் தெளிவுரையினை அமைத்துள்ளேன். தமிழ் அன்பர்கட்கு ஒரளவாவது இதனாற் பயன் ஏற்படுமாயின், டாக்டர் ஐயரவர்களின் திருத்தொண்டின் சீர்மையே அதற்கும் காரணமாகும். அவர்களின் பணி தமிழுள்ள காலம் வரை தமிழ் நெஞ்சங்களிலே நின்று நிலவும் பெரும் பணியாகும். அவர்களின் திருப்பெயருக்கு அஞ்சலி செய்து இதனைத் தமிழன்பர்கட்கு விருந்தாகப் படைக்கின்றேன். - இந் நூற் கருத்துகளைத் தொல்காப்பியப் புறத்திணை இயலோடு ஒப்பிட்டு, ஆங்காங்கே விளக்கியும் இந்நூல் அமைந்துள்ளது. இஃது ஒரு புதிய சிறப்பாகும். உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியரது தொல்காப்பியப் புறத்திணை இயல் விளக்கத்தைத் தழுவிய சிறப்பும் இதற்கு உண்டு. இந்நூலின் பன்னிரண்டு படலத்தும் அமைந்து விளங்கும் பொருண்மை, பொதுவாக அந்நாளிலே நிலவிய புறப்பொருள் ஒழுக்கத்தினை நமக்கு உணர்த்துவதாகும். அவற்றுள், வெட்சித்திணை பகைவருடைய ஆநிரைகளைக் கவர்தலாகிய ஒழுக்கத்தையும், கரந்தைத் திணை அங்ங்னம் பகைவரானே கவர்ந்து கொண்டு போகப்பட்ட நிரைகளை, அவற்றிற்கு உரியவர் மீட்டலையும் உணர்த்துவன. - வஞ்சித்திணை பகைவரது நாட்டைக் கவர்தலை நினைந்து போர் செய்தற்கு மேற்செல்லலாகிய ஒழுக்கத்தையும், காஞ்சித்திணை அங்ங்னம் வந்த பகைவர்க்கு எதிர்சென்று அவரது முயற்சியைத் தடுத்தலையும் உணர்த்துவன. நொச்சித்திணை பகைவருக்கு எதிராகத் தம்முடைய மதிலைக் காத்து நிற்றலையும், உழிஞைத்திணை பகைவரது மதிலைச் சுற்றி வளைத்துக் கொண்டு, காத்து நிற்கும் நொச்சியாரை வெற்றி கொள்ளலையும் உணர்த்துவன. தும்பைத்திணை தம்முடைய போாண்மையின் மிகுதிப்பாடு தோன்றப் பகைவரொடு போரிடுதலையும், வாகைத் திணை போரின்கண் வெற்றிப் பெற்றுச் சிறத்தலையும் உணர்த்துவன. பாடாண்திணை ஒருவனுடைய கீர்த்தி கொடை வலிமை தண்ணளி ஆகியவற்றை ஆராய்ந்து சொல்லிப் பாடுதலைக் குறிப்பது.