பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் உய்ந்தொழிவார் ஈங்கில்லை ஊழிக்கண் தீயேபோல் முந்தமருள் ஏற்றார் முரண்முருங்கத்-தந்தமரின் ஒற்றினான் ஆய்ந்தாய்ந்து உரவோர் குறும்பினைச் சுற்றினார் போகாமற் சூழ்ந்து. வலிமைகொண்ட வெட்சி மறவர்கள், தம்முடைய இனத்தாரான ஒற்றர்களினால் பன்முறையும் பகைவரது நிலைகளை ஆராய்ந்தறிந்த பின்னர்ப்போரின்கண் முற்பட வந்து எதிர்ந்தாருடைய மாறுபாடு கெடும்படியாக, ஊழியிறுதிக்கண் தோன்றும் தீயினைப்போல எழுந்து, 'இவ் வரணினின்றும் உயிர்பிழைத்துப் போவார் யாருமில்லை’ என்னும்படியாக, எவரும் வெளியேறிப் போகாதபடிக்கு, அரணினைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டனர். இது கண்டோர் கூற்று. 'ஊழித் தீக்கு எதிரே உய்ந்து பிழைப்பார் எவருமிலர் என்பதுபோல, வெட்சிமறவரின் போர் வெம்மைக்கு எதிரிட்டு வந்த பகைவர் முற்றும் அழிவர் என்பதும் உறுதியாகும் என்றதாம். முரண்-மாறுபாடு. முருங்க-அழிய, குறும்பு-காவற்காட்டுச் சிற்றரண். போகாமற் சூழ்ந்து' என்பதனால், நூழையும் வாயிலும் போக்கற வளைஇய தன்மை கூறப்பட்டது. 'ஊழிக்கண் தீயேபோல்’ என்னும் போர்ச் சினத்தினை வெட்சியாருக்குப் போன்றே கரந்தையாருக்கும் உரித்தாக்குவர். அப்போது, அங்ங்னம் வந்து முந்து அமருள் ஏற்றாரின் முரணும் முருங்க, அவரை அழித்து வெல்பவர் வெட்சியார்’ என்று உரைக்க. 6. ஊர்கொலை 7 விரையரி கடவி வில்லுடை மறவர் குரையழல் நடப்பக் குறும்பெறிந்தன்று. ஊர் கொலையாவது, வில்லேந்தியவரான வெட்சி மறவர்கள், விரையச் செல்லுகின்றவான தம்முடைய குதிரைகளைச் செலுத்திச் சென்றவராக, முழங்கும் தீயானது பரவும்படியாகப், பகையரணை அழிப்பதாகும். 'விரைபரி’- போர்க் குதிரைகள். கடவுதல்-செலுத்துதல். குரையழல்-கொழுந்துவிட்டு ஒலியுடன் பற்றியெரியும் பெருந் தீ, நடப்பநிகழ. குறும்பு எறிதலால் அதனைக் காத்து நின்றவரைக் கொன்றமையும் நிகழும். எனவே, இத்துறை ஊர்கொலை’ எனப்பட்டது. محي