பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________


ஆய்வுரை

3

தெளிவு இருக்கும் என்று ஐயனாரிதனார் வெட்சி என்ற ஒரு திணையினை வெட்சி, கரந்தை என்ற இரண்டு திணைகளாகத் தன் நூலிற் காட்டுவர்.

  இஃதே போன்று வஞ்சித்திணைக்குரிய 'இயங்குபடையரவம்' என்று தொடங்கும் நூற்பாவில் உள்ள பதின்மூன்று துறைகளில் பத்துத் துறைகள் வட்கார் மேற்செல்வார்க்கும் எதிர் ஊன்றுவார்க்கும் பொதுவானவை என்று வைத்து அப்பத்துத் துறைகளை இருபதாக்கி ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் எடுத்துக் காட்டுத் தந்துள்ளார் நச்சினார்க்கினியர். இளம்பூரணரும் இந்நூற்பாவின் உரையின் இறுதியில் 'வென்றோர் விளக்கம், முதலிய மூன்றும் ஒழிந்த ஏனைய எல்லாம் இருதிறத்தினர்க்கும் பொதுவாக நிற்றலின் கழிபெருஞ் சிறப்பெனக் கூறினார்' என்பர். படையெடுத்துச் செல்வதனையும் அப்படையினை எதிர்த்துப் போரிடுவதனையும் தொல்காப்பியர் வஞ்சியினுள் அடக்கினார் என்பது இவ்வுரைகளினால் புலப்படும். புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரோ இரண்டையும் இருவேறு திணைகளாகப் பிரித்தல் நலம் என்று வஞ்சி, காஞ்சி என்றார்.புறப் பொருள் வெண்பாமாலையில் வரும் காஞ்சிக்கும் தொல்காப்பியத்தில் வரும் காஞ்சிக்கும் வேறுபாடு உண்டு. அதனைப் பின்னர் காணலாம்.
  உழிஞைத் திணையைப் பற்றிய 'கொள்ளார் தே எம் குறித்த கொற்றமும்' என்ற நூற்பாவில் முதல் நான்கு துறைகளும் முற்றுகையிடும் புறத்தோனுக்குரியனவாகவும் பின் நான்கு துறைகளும் முற்றுகையிடப்பெற்ற அகத்தோனுக்குரியனவாகவும் சொல்லப் பெறும். நச்சினார்க்கினியர் தம் உரையில் "குடையும் வாளும் நாள்கோளன்றியும்" என்ற நூற்பாவில் உள்ள பன்னிரண்டு துறைகளையும் முற்றுகையிடுவோனுக்கும் உள்ளிருப்போனுக்கும் பொதுவாக்கி முற்றுகையிடுவோனுக்குப் பன்னிரெண்டாகவும் உள்ளிருப்போனுக்குப் பன்னிரெண்டாகவும் சொல்வர். இவ்விரண்டு நிலைகளையும் தொல்காப்பியரைப் போன்று உழிஞை என்ற ஒன்றில் அடக்காது ஐயனாரிதனார் இந்நிலைகளை உழிஞை என்றும் நொச்சி யென்றும் இரண்டு திணைகளாக்கிக் காட்டினார். 'அகத்தோன் வீழ்ந்த நொச்சி' என்றமையால் நொச்சி துறையாகத் தொல்காப்பியத்தில் உள்ளது என்பது போதரும். அது திணையாகிறது புறப் பொருள் வெண்பாமாலையில். ஆகத் தொல்காப்பியர் வெட்சி