பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

தமிழ் கற்கும் மாணவர்கள் இந்நூலினையும் உரையினையும் மரபு வழியாகப் பயின்று வருவதால் அவர்களுக்கு எளிதில் விளங்கும் வகையில் உரை விளக்கம் செய்து பாட நுண்பதிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இப்பொழுது பதிப்பிக்கின்றது. இப்பதிப்பில் அமைந்துள்ள ஆய்வுரை தொல்காப்பியப் புறத்திணை இயலையும் புறப்பொருள் வெண்பாமாலையையும் ஒப்பு நோக்கி எழுதப்பெற்ற சிறப்பினது. தொல்காப்பியத்திலுள்ள காஞ்சித்திணையும், புறப்பொருள் வெண்பாமாலையிலுள்ள காஞ்சித்திணையும் பெயரளவில் ஒன்றாக இருப்பினும் அவை பொருள் அளவில் வேறுபாடு உடையன என்பது இவ்வாய்வுரையில் தெளிவு செய்யப் பெற்றுள்ளது. புறப் பொருள் வெண்பாமாலையில் தொல்காப்பியத்தை நோக்கப் புதிய திணைகளும், துறைகளும் எழுந்துள்ளன என்பது விரித்துரைக்கப் பெற்றுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் திரு. சுப. இராமநாதன் எம்.ஏ., எம்.லிட் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். கூர்த்த மதி நலமும், நிரந்தினிது சொல்லும் ஆற்றலும் மிக்கவர். எதனையும் ஒப்பு நோக்கும் திறமுடையவர், தொல்காப்பியத்தையும், புறப்பொருள் வெண்பாமாலையையும் ஒப்பு நோக்கி இவர் அளித் துள்ள ஆய்வுரையே இவர் தம் புலமைநலத்துக்குத் தக்க சான்றாகும். இவர்கள் இந்நாலின் இறுதியில் புறப்பொருள் வெண்பாமாலை திணை துறைகளையும், அவற்றிற்கேற்ற தொல்காப்பியத் திணை துறைகளையும் ஒப்பிட்டுத் தந்துள்ள அட்டவணை இவ்விரு நூல்களை நுணுகிக் கற்பார்க்குப் பெரிதும் பயன் தருவதாகும், இந்நூல் சிறக்க உதவிய பதிப்பாசிரியர் நன்றியுடன் போற்றத்தக்கவராவர். இந்நூல் 'வெளிவர உதவிய வெளியீட்டுக் குழுவிற்கும் ஆட்சிக் குழுவிற்கும் தமிழ்த்துறை சார்பாக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நூலினைச் சிறந்த முறையில் அச்சிட்டு உதவியுள்ள சிதம்பரம் "விநாயகா" அச்சகத்தார்க்கு எனது பாராட்டுதல்கள்.