பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

துள்ளனர். இன்று இந்நூலில் சில பாக்களே கிடைத்துள்ளன. இப்பன்னிரு படலத்தை முதனூலாகக் கொண்டு இயற்றப்பெற்றது இப்புறப்பொருள் வெண்பாமாலை.

 வெட்சிமுதல் பெருந்திணை யீருகப் பன்னிரண்டு திணைகளையும் பன்னீருபடலங்களிற் கூறி, இவைகளொழிந்தவற்றை ஒழிபு என்ற பகுதியிலும் விளக்குகிறதிந்நூல், ஒவ்வொரு படலத்தின் தொடக்கத்திலும் அப்படலத்திலுள்ள துறைகளைத் தொகுத்து ஒருநூற்பாவில் ஆசிரியர் சொல்கிறார். பின் ஒவ்வொரு துறைக்குரிய விளக்கத்தைத் தரும் கொளுச் சூத்திரமும் அதனையடுத்து அத்துறையினை விளக்கிச் சொல்லும் வரலாற்று வெண்பாவும் இடம் பெறுகின்றன.

இந்நூலாசிரியர் ஐயனாரிதனார் ஆவார். இவர் சேரமரபினராவார். சைவ சமயத்தைச் சேர்ந்தவர். எனினும் பிற தமிழ் அரச மரபுகளையும் திருமாலையும் உரிய இடங்களிற் புகழ்ந்து சொல்கிறார்.
 இந்நூலிற்கு உரைவரைந்தவர் ஐயங்கொண்ட மண்டலத்து மேற்கானாட்டு மாறகலூர் கிழார் சாமுண்டி தேவ நாயகர் என்பர். வேளாண் மரபினராவார் இவர்.
  இந்நூலிலுள்ள வரலாற்று வெண்பாக்களிற் பலவும் கொளுக் களுட் சிலவும் பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்ற பழைய உரையாசிரியர்களால் மேற்கோளாகவும் எடுத்துக்காட்டாகவும் தரப்பெற்றுள்ளன.
 எழுத்திற்கும் சொல்லிற்கும் நன்னூலும், யாப்பியற்கு யாப்பருங்கலக் காரிகையும், அணிக்குத் தண்டியலங்காரமும் இன்று தமிழ் பயில்வோரால் விரும்பிக் கற்கப் பெறுதல் போன்று புறப்பொருளிற்கு இந்நூலே கற்கப் பெறுகின்றதென்றவொன்றே இந்நூலின் சிறப்பினைப் புலப்படுத்தும்.

அண்ணாமலைநகர்' 22-4-83 சுப. இராமநாதன்