உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

புல்லின் இதழ்கள்

தோடும் முத்துக்களைப் போன்று அவனது தொண்டையில் மூன்று ஸ்தாயிகளும் அநாயாசமாகப் புரண்டோடிய-துளி பிசிறில்லாத பிர்காவையும் கண்டு அனைவரும் வியந்தனர். பாகவதரையே உரித்து வைத்தாற் போன்று, ஒவ்வொரு ராகத்திலும் அவன் கையாள்கிற பிடியையும், அடுக்குப் பாறை போல் படிப்படியாகவும், சரளமாகவும், நடை பேதங்களுடன் ஸ்வரம் பாடுகிற பந்தாவையும், சர்வலகு சுத்தத்தையும் கண்டு பிள்ளையவர்கள் பிரமித்துப் போனார்.

கடைசியாக ஒரு திருப்புகழைப் பாடி முடித்தவுடன், பிள்ளையவர்கள் ஹரியை அப்படியே வாரி எடுத்து மார்போடணைத்துக் கொண்டார். அவரது குழி விழுந்த கண்களில், வைரத் துண்டுகளைப் போல நீர்த் துளிகள் மின்னின.

“உனக்கு இறைவன் வற்றாத தீர்க்காயுசைக் கொடுக்க வேண்டும். அது ஒன்றுதான், நான் என் வாயால் வாழ்த்தக் கூடியது. மற்றதெல்லாம் உனக்கு இருக்கிற வித்தைக்குத் தானே தேடி வந்து அடையும்” என்று ஆசீர்வாதம் செய்தார். பாகவதரைப் பார்த்து, “சுப்பராமா, உனக்குப் பிறகு பெயர் சொல்ல நல்ல பரம்பரையை உண்டாக்கி விட்டாய். நீ அதிர்ஷ்டக்காரன்தான்” என்றார்.

ஹரியினுடைய கையிலிருந்த தம்பூராவைப் பெற்றுக் கொண்ட வசந்தி, நன்றிப் பெருக்குடன் பிறர் அறியா வண்ணம் அவனை ஒரு முறை பார்த்து விட்டு, மாடியை நோக்கிச் சென்றாள்.