உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

புல்லின் இதழ்கள்

முன்னிலையிலும், பிரபுக்கள் எதிரிலும் பாட வேண்டிய பாட்டு. வெறுங்கையுடன் வந்து தெரியாமல் உட்கார்ந்து விட்டேன். என்னிடம் இப்போது இருப்பது இவ்வளவுதான். ஆனால், இது இவன் பாடிய கல்யாணிக்குக் கோடியில் ஒன்று பெறாது. இருந்தாலும், இது என் ஆசீர்வாதம்” என்று கூறித் தம் கையில் போட்டிருந்த தங்கத் தோடாவைக் கழற்றி, ஹரியின் கையில் பூட்டினார். அப்போது சபையில் எழுந்த ஆரவாரம் அடங்கிப் பஞ்சு அண்ணா பிடில் வாசிக்கச் சிறிது நேரம் ஆயிற்று.

கல்யாணி ராகத்தைத் தமக்குக் கிடைத்த வரப் பிரசாதமாக எண்ணித் தமக்குத் தெரிந்த திறமையை எல்லாம் காட்டி, பஞ்சு அண்ணாவும் வெளுத்து வாங்கினார். ஆனால் என்னதான் தேனாக இருந்தாலும், அமுதத்துக்கு ஈடாகுமா? அதை பஞ்சு அண்ணாவும் பாரபட்சமில்லாமல் மனமார ஒப்புக் கொண்டார். நெரடான தாளத்தில் அமைந்த ஒரு கிருதியில் ஹரி விட்ட இடத்தில், ராஜப்பா தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்தபடித் தன்னை மறந்து கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்த பாகவதரின் நினைவுகள், அவரை இறந்த காலத்தை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்தன.

பாகவதர்”—என்கிற அடைமொழி இல்லாமல் - வெறும், சுவாமி மலை சுப்பராமனாக அவர் முன்னுக்கு வந்து கொண்டிருந்த நேரம். பூர்வஜென்ம வாசனையோ; விட்ட குறை - தொட்ட குறையோ - அல்லது கடுமையான உழைப்பும்; இயற்கையான ஞானமும்; அறிவும் திறமையுமோ ஏதோ ஒன்று—குருநாதர் முன்னிலையில், இளம் வயதில் அரங்கேறிய சுப்பராமன் மிகக் குறுகிய காலத்திற்குள், புகழேணியின் உச்சிக்குச் சென்று விட்டார்.