உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரங்கேற்றம்

179

அந்த வயதில் சுப்பராமன் ராகங்களைக் கையாள்கிற பாணியையும்; அவரது அபாரமான ஸ்வர ஞானத்தையும் கண்டு பெரிய வித்வான்களே பிரமித்துப் பாராட்டினர்.

ஆயினும், அவருடைய இசையில் ‘தேசியம்’ கலப்பதாகச் சில பிராசீன வித்வான்கள் குறைபட்டுக் கொண்டனர். சுப்பராம பாகவதரோ—

‘ஒரு கச்சேரிக்கு சம்பிரதாய சுத்தம் எவ்வளவு முக்கியமோ’—அதே போல ஜனரஞ்சகமும் முக்கியம் என்றே எண்ணினார்.

பலாச் சுளையில் தேனைத் தடவுவது போல- ‘யமன் கல்யாணி, ஹிந்தோளம், தேஷ், தர்பாரி கானடா, சிந்து பைரவி’ போன்ற குறிப்பிட்ட சில ராகங்களில் அவர் லேசாகத் தேசியம் கலந்து பாடும் போது; கேட்கிறவர்கள் சொக்கிப் போவார்கள். சாமானிய ரசிகர்களும் தம்மை மறந்த ஆனந்தத்தில் கரகோஷம் செய்வார்கள். அப்போதெல்லாம் அவர்—

‘எனக்கு இதுதான் முக்கியம். என்னுடைய பாட்டைக் கேட்டுப் பாமரரும் ரசிக்க வேண்டும். பொது இடங்களில் கச்சேரி செய்ய எனக்குக் கிடைத்த மேடையை—சாஸ்த்ரிய சங்கீதத்தில் எனக்குள்ள மேதா விலாசத்தைப் பிரகடனப் படுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி - பயன்படுத்த நான் விரும்பவில்லை.

சங்கீதத்தைப் பற்றி அதிகம் தெரியாத-லட்சக் கணக்கானவர்களையும், என் இசை சென்று தொட வேண்டும். அவர்கள் உள்ளங்களை என் இசை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே பாடுகிறேன்’- என்றே எண்ணினார்.

அதனாலேயே தன்னுடைய கச்சேரியில் ஒரு பகுதியைத் தமிழ் பாடல்களுக்காக ஒதுக்கினார். அருணாசலக் கவி ராயரின் ‘ராம நாடக’ கிருதிகளையும்; கோபால கிருஷ்ண பாரதியின் ‘நந்தனார்’ சரித்திரப் பாடல்களையும் அவர்,