உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயம் வெளுத்தது

339

இன்னும் விட்டுக் கொண்டிருப்பது தவறு என்று காயத்திரி தீர்மானித்தாள்.

அவளது கண்ணீரை விரல்களினால் துடைத்து விட்டபடியே, காயத்திரி கேட்டாள்: “யாருக்காக அழுகிறாய் சுசீலா?”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சுசீலாவின் கட்டுக்கடங்கியிருந்த துக்கம் மீண்டும் பீறிட்டு வெளிப்பட்டது.

காயத்திரி அவளை அணைத்துக் கொண்டாள். இருவரும் கிணற்றங்கரையில், துவைக்கும் கல்லின் மீது அமர்ந்திருந்தனர். தோட்டத்தைச் சுற்றிக் கொண்டு வந்த காலை இளங்காற்று, ‘சில்’லென்று முகத்தில் பட்டதும், சுசீலாவுக்குச் சற்றுத் தெம்பு வந்தது. காயத்திரி மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள்: “உன்னை நான் புத்திசாலி என்று எண்ணியிருந்தேன்; அது தவறு என்று இன்று புரிகிறது. உங்கள் சண்டையை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.”

எடுத்ததுமே காயத்திரி தொடுத்த வார்த்தைகளின் வேகம் தாள மாட்டாமல், சுசீலா அவளை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள்.

“என் மேல் என்ன தப்பு?”

“அத்தனையுமே தப்பு. ஹரியிடம் நீ ஏன் இத்தனை கடுமையாக நடந்து கொள்கிறாய்? ஹரிக்கும், உனக்கும் என்ன சம்பந்தம்? முன்பு வசந்தியிடம் பேசக் கூடாதென்று சண்டை போட்டாய்; இப்போது காந்தாமணியைப் பார்க்கக் கூடாது என்கிறாய். இப்படி ஹரியைக் கோபித்துக் கொள்ள நீ யார்? உனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

இதைக் கேட்டதும், சுசீலாவுக்குக் கோபம் வந்து விட்டது. “உரிமை இருப்பதனால்தான், சண்டை போடுகிறேன்.