உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தாமணியின் கடிதம்

407

தங்கையின் அழகைக் கண்டு, காயத்திரியே வியந்து போய் நின்று கொண்டிருந்தாள்.

களி உவகை பொங்க; தனது இனிய மணத்தை உலகெங்கும் பரப்பும் வசந்த காலத்தின் முதல் பருவம் போல்; சுசீலாவின் ஒவ்வொரு அங்க அசைவிலும் அழகு பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.

நீண்ட கருநாகம் போன்று வளைந்து தொங்கிய கூந்தலின் மீது சீப்பு ஓடிய தடம் பளபளத்தது. ஏதோ ‘சென்ட்’ கடைக்குள் நிற்பது போலிருந்தது காயத்திரிக்கு. பவுடரைக் கைகளில் கொட்டி, சுசீலா முகத்தில் பூசிக் கொண்ட போது, தாமரைக் கொடியன்ன கரங்களில் வளையல்கள் சலங்கை கட்டியது போல், அசைந்து ஒலித்தன. தங்கத்தினாலான மயிற்பதக்கம் - மங்களபுரி மகாராணி ஹரிக்குப் பரிசளித்தது - சுசீலாவின் மார்பில் தவழ்ந்தது.

உடலெல்லாம் ஜரிகை இழை ஓடிய நீல நிறப் பட்டுப் புடவைக்குப் பொருத்தமான உயர்ந்த ரகச் சோளியை அணிந்திருந்தாள். வெள்ளிக் கிண்ணத்தில் துள்ளும் கெண்டை மீனை ஒத்து, விழிகள் அஞ்சனம் தீட்டப்பட்டு, கருவண்டெனச் சுழன்று கொண்டிருந்தன. மாதுளை மொக்கு நிகர்த்த உதடுகள் தாம்பூலம் தரித்து, ரத்தச் சிவப்பேறி, அவளுடைய பொன் நிறத்துக்கு முத்திரை குத்தியது போலிருந்தது. காயத்திரி தன் பின்னால் நிற்பதைத் தெரிந்து கொண்ட சுசீலாவின் செவ்விதழ்களில், புன்னகை தவழ்ந்து மின்னியது.

தன் அழகை அவளே வியந்து கொண்ட வண்ணம், எதிரில் இருந்த பூப்பந்தை எடுத்து காயத்திரியின் கையில் கொடுத்து விட்டுத் திரும்பிக் கொண்டாள்.

காயத்திரி அதைச் சுசீலாவின் தலையில் சூட்டி விட்டு, “கண்ணேறுதான் படப் போகிறது!” என்று ஒரு திருஷ்டிப் பொட்டும் வைத்து அனுப்பினாள்.