உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

புல்லின் இதழ்கள்

“அவன்தான் தெரியாமல் வந்து உட்கார்ந்தான் என்றால், உனக்குப் புத்தி எங்கே போச்சு? சொல்ல வேண்டாம்?” என்று சீறி விழுந்தார்.

“அவன் ஒன்றும், தெரியாமல் வந்து உட்கார்ந்து விடவில்லை; நானும் தெரியாமல் போடப் போகவில்லை. அவன் வழக்கமாகச் சாப்பிடும் இடந்தான் இது. இங்கே தான் போட வேண்டும் என்பது அவர் உத்தரவு. நாங்கள் எல்லாரும் இங்கே ஒன்றாய்த்தான் சாப்பிடுகிற வழக்கம்.” லட்சுமியம்மாள் சாதாரணமாகத்தான் இதைக் கூறினாள். நாணா மாமாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“ஒன்றாய்த்தான் என்றால்? இங்கேயே இதே சாப்பாடு, எல்லாருக்கும் சமபந்தி, சம போஜனமா?”

“என்ன மாமா, நீங்கள் இப்படி ஆச்சரியப்படுகிறீர்கள்! இந்த வீட்டிலே சாப்பாட்டில் மட்டுமல்ல; எல்லாவற்றிலுமே ஹரிக்குத்தான் அப்பா முதல் இடம் கொடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு ஆண் வாரிசு இல்லையல்லவா? அந்தக் குறையை இப்படித் தீர்த்தாகிறது. நீங்கள் காவிரிக்குக் குளிக்கப் போய் அதிக நேரமானவுடன், அம்மாதான் கவலைப்பட்டு ஹரியைக் காவிரிக்கு அனுப்பியிருந்தாள். இல்லாவிட்டால், அவனும் நம்முடனேயே அப்பொழுதே சாப்பிட்டாகியிருக்கும்.” சுசீலா, மாமாவுக்கு வீட்டு நிலவரத்தை ஒரு கோடி காட்டி விளக்கினாள். நாணா இதை எல்லாம் கேட்டதும், நரசிம்ம மூர்த்தியாக மாறினார்.

“அவ்வளவு தூரத்துக்கு விஷயம் முற்றி விட்டதா? அதுதான் அவன் அப்படித் துளுத்துப் போயிருக்கிறான்; பார்க்கிறேன், அவன் எல்லாரோடும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுகிறதை; வித்தை சொல்லிக் கொடுத்தால், அது அந்த மட்டோடு! வரட்டும் சுப்பராமன்; நானே கேட்டு, இதற்கு ஒரு முடிவு கட்டி விட்டுப் போகிறேன்” என்றவர்,