உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதவு திறந்தது

93

சொன்னேன். இப்போது இவளை உங்களிடம் ஒப்படைத்து விட்டுப் போகலாம் என்றுதான் வந்திருக்கிறேன். அதற்கு உங்களுடைய ஆதரவான பதிலைத் தாருங்கள்” என்று கூறி நிறுத்தினாள்.

ஆனால், பாகவதர் உடனே, “நான் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன். ஆனால் இனி மேல், சிட்சைக்கு மாத்திரம் யாரையும் எற்றுக் கொள்ளுவதாக உத்தேசம் இல்லை” என்று கூறி விட்டார். இதைக் கேட்டதும் அந்த அம்மாளுக்குக் கையிலெடுத்த காபி நடுங்க ஆரம்பித்து விட்டது. அவள் முகம் சுண்டிப் போய் வேதனையே உருவாகக் காட்சியளித்தது.

“என்ன, நீங்கள் இப்படிச் சொன்னால் எப்படி? நாங்கள் எவ்வளவு ஆசையோடு உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்! பெரியவரான நீங்கள் எப்படியாவது அவளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து, முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். ஆரம்பப் பாடங்களைச் சொல்லக் கொடுக்கிற கஷ்டங்களை உங்களுக்கு நான் வைக்கவில்லை. வர்ணம் வரை நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். மேற்கொண்டு முறையோடு உங்களிடம் நல்ல சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்திருக்கிறோம். நீங்கள் இருக்கிற இடத்துக்கே இவளை அனுப்பி வைக்கிறேன். வாரத்துக்கு இரண்டு நாள் சொல்லிக் கொடுத்தால் போதும்; இவள் பிடித்துக் கொள்வாள். எப்படியாவது மனசு பண்ணியாக வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள்.

பாகவதரும், அதற்கு மிகவும் இதமாகவே பதில் கூறினார்: “நீங்கள் சொல்லுவதெல்லாம் சரிதான். எனக்கும் உங்கள் ஆசையைத் தீர்க்க வேண்டாம் என்கிற எண்ணமில்லை. ஆனாலும் வயதாகி விட்டது. உடம்பில் திராணியில்லை என்னும் போது: என்னால் ஆகாததை