பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல ஆட்டக்காரர் என்றால், தான் கற்றுக் கொண்டிருக்கும் ஆட்டக் கலை நுணுக்க முறைகளை அந்தந்த சந்தர்ப்பத்திற்கேற்றவாறு ஆடி, அதிகமான வெற்றி எண்களைப் பெறுகிறார் என்பதாகும். புதிதாக கற்றுக் கொள்ளும் இளைஞர்கள், எல்லாவற்றிலும் சிறப்புற விருத்தியடைய வேண்டும் என்று விரும்புவார்கள். விரும்புவதில் ஒன்றும் தவறில்லை.

அத்தனை முறையிலும் ஆசைப்பட்டு அறைவேக்காடுபோல ஆகிவிடாமல், எந்த ஆட்டமுறை தனக்கு எளிதாக வருகிறதோ, அதனை நன்கு பழகி தொடர்ந்து மெருகேற்றி வந்தால், சிறந்த ஆட்டக்காரர் ஆகலாம். ஆகவே, புதிய ஆட்டக்காரர்களுக்கு உதவும் பொருட்டு, ஆட்ட முறைகளில் உள்ள நுணுக்கங்களையும், முக்கிய குறிப்புக்களையும் கொடுத்திருக்கிறோம். படித்தும், பழகியும் பயன்பெறுக என்று அழைக்கிறோம்.

1. சர்விஸ் போடும் போது (Service)

சர்விஸ் என்பது மிக முக்கியமான திறன் நுணுக்கமாகும். பலர் இதனை பொருட்படுத்தாது எதிர்க்குழு பகுதிக்குள் பந்தை அனுப்பும் ஒரு சம்பிராதாயமான செயல் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறான கருத்தாகும்.

சர்விஸ் போட்டு, அது ஒழுங்காக எதிர்க்குழுவிற்குப் போனால்தான், வெற்றி எண் பெறமுடியும்.

வேறு சிலர், சர்விஸ் போட்டே வெற்றி எண் பெற வேண்டும் என்ற துடிப்பில், கஷ்டமான, தவறுகள் நேர்கின்ற சர்விஸ் முறைகளை பின்பற்றுகின்றார்கள்.