பக்கம்:பூமியின் புன்னகை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

33

ஒநாய்க் கொடுமைகளைக் கண்ணெதிரே கண்டபினும்
உமக்கென்ன கவிவேண்டிக் கிடக்கிறதோ?

என்னமோ நீர்தான் தமிழ்மொழிக்கு எழிலூட்டி
இன்னமுதப் புதுக்கலவை வனப்பூட்டி

வன்னமாம் பலதிறமை வனைந்தூட்டிப் படைத்தாலும்
வகைவகையாய்க் கவிமாரி பொழிந்தாலும்
 
முன்னரே எழுதிவைத்த தலையெழுத்துச் சரியில்லை
மூண்டிருக்கும் பதவிகளை எதிர்ப்பறியீர்

இன்னுமா எழுதுகிறீர் கவியென்னும் சித்திரத்தை
இங்குமது பருப்பெல்லாம் வேகாது.

பதவிக்குப் பயப்பட்டுப் பலபேரைக் கவியென்று
பணிந்துவிடும் நம்நாட்டு வழக்கத்தால்

உதவிக்கு ஆளில்லா உயர்ந்தரகக் கவிகள் எல்லாம்
உப்புவிற்றோ புளிவிற்றோ பிழைத்திடலாம்

எதைவைத்துப் போரிடுவீர் இதயமிலா இந்நாட்டில்
இன்னுமா எழுதுகிறீர் தமிழ்க்கவிதை?

உதைபட்டுப் போகாதீர் ஊரோடு சேர்ந்துநீரும்
ஒலியெழவே ஜால்ராவைத் தட்டிவிடும்.
(செப்., 1971)