பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பூர்ணசந்திரோதயம்-1 எடுத்துக்கொண்டு போய் திருவாரூரிலிருந்த தபாற் பெட்டியில் போட்டுவிட்டு வருவது என்ற கேள்வி உண்டாயிற்று. அப்படிப்பட்ட குற்றேவல்களை எல்லாம் எப்போதும் முத்தம்மாளே செய்து வருவது வழக்கம். ஷண்முகவடிவு ஒருபோதும் வீட்டை விட்டுத் தனியாகப் போனவளே யன்று. ஆனால், அந்த உண்டியலை ஷண்முகவடிவே எடுத்துப்போய் செட்டியாரது பாங்கியில் கொடுத்து நேரில் கையெழுத்துச் செய்தாலன்றி பணம் கொடுக்கப்பட மாட்டாது. ஆகையால், அதற்கு அவளே நேரில் போக வேண்டியிருந்தது. அவள் வேலைக்காரியையும் தன்னோடு கூட அழைத்துக் கொண்டு போவதற்கு இயலாமலிருந்தது. ஏனெனில், பாயும் படுக்கை யுமாக இருந்த நீலலோசனியம்மாளை அநாதரவாகத் தனிமையில் விடுத்துப்போவதும் சரியல்லவெனத் தோன்றியது. ஆகவே, முத்தம்மாள் வீட்டிலிருந்து நீலலோசனி அம்மாளைப் பார்த்துக் கொண்டிருப்பது என்றும் ஷண்முகவடிவு திருவாரூருக்குப்போய் கடிதத்தைத் தபாலில் போட்டுவிட்டு உண்டியலைப் பணமாக மாற்றிக்கொண்டு வருவது என்றும் அவர்கள் ஏற்பாடு செய்து கொண்டனர். உடனே ஷண்முகவடிவு தனது போஜனத்தை முடித்துக் கொண்டு அந்த மாளிகையை விட்டுப் புறப்பட்டு திருவாரூருக்குப் போய்ச் சேர்ந்தாள். கந்தருவ ஸ்திரீயின் அழகும், தோகை மயிலின் சாயலும், பிணைமானின் மருண்ட பார்வையும், அன்னத்தின் நடையும், பதிவிரதா ஸ்திரிகளின் அடக்கம், ஒழுக்கம், நாணம் மடம் அச்சம் முதலிய வசீகரமான ஆபரணங்களும், சுத்தமான எளிய உடைகளும், சகலமான உத்தம லக்ஷணங்களும் ததும்பிய மனதும், மகா பரிசுத்தமான சரீரமும் வாய்ந்தவளாக இருந்த அந்தப்பெண்மணி, தனது அடிகள் கொப்புளிக்க, இடை நோக, வியர்வை முத்துக்கள் முகத்தில் அரும்ப, வெயிலில் தனி வழி நடந்து திருவாரூரை அடைந்து தனது கையிலிருந்த கடிதத்தைத் தபாற் பெட்டியில் போட்டுவிட்டு, நேராக பாங்கிக்குப் போய், செட்டியாரைக்